தடை வேண்டும்சென்னை உட்பட 4 மாவட்டங்களிலிருந்து இ பாஸ் பெற்று வர :கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வருமா

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநிலங்கள், சென்னையிலிருந்து வருவோரால் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலிருந்து வருவோருக்கு முக்கிய அத்தியாவசிய தேவை நீங்கலாக இ பாஸ் பெற்று வர தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 163 ஐ தொட்டுள்ளது. பெரும்பாலும் வெளிமாநிலங்கள், சென்னை, சென்னையை சுற்றிய 3 மாவட்டங்களிலிருந்து வருவோரால் அதிகம் பரவுகிறது. திருமணம், இறப்பு, மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காக வர மாவட்ட நிர்வாகம் இ பாஸ் வழங்குகிறது. சிலர் பொய்யான தகவல்கள், ஆவணங்களை குறிப்பிட்டு இ பாஸ் பெற்று வருகின்றனர்.

திருநெல்வேலி ,தென்காசி,கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு செல்லும் போது அம்மாவட்ட எல்லையில் அதிகாரிகள் விசாரித்து பரிசோதனை செய்து அனுப்புகின்றனர். ஆனால் விருதுநகர் மாவட்டத்திற்குள் வருவோர் குறித்து அதிகாரிகள், போலீசார் கண்டுகொள்வது இல்லை. இங்கும் பரிசோதனையை தீவிரப்படுத்துவது அவசியம்.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து வருவோரால் பரவல் அதிகரிப்பதால் சேலம் வர இ பாஸ் வழங்குவதை அந்த மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் பரிசோதனை செய்து முடிவு தெரிந்த பிறகே வீட்டிற்கு அனுப்புகின்றனர். அதுவரை அரசு தனிமை மையத்திலே காத்திருக்க வேண்டும். விருதுநகரிலும் இது போன்ற சில கண்டிப்பான நடைமுறைகளை அமல்படுத்துவதோடு பக்கத்து மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களையும் போலீஸ் உதவியுடன் கட்டுப்படுத்த வேண்டும்.பொதுமக்களும் சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.

இரவு பகலாக கண்காணிக்கிறோம்

வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் மாவட்ட எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நெடுஞ்சாலைகளில் செயல்படும் 6 சோதனை சாவடிகளில் வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி துறையினர் இரவு பகலாக கண்காணிக்கின்றனர்.

எல்லையில் வரும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 2 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட சோதனை சான்று இருந்தால் வீட்டு தனிமையில் வைக்கிறோம். சான்று இல்லையெனில் அருகில் உள்ள தனிமை மையங்களில் பரிசோதித்து முடிவுகள் வந்த பின் வீட்டு தனிமைக்கு அனுப்புகிறோம். தொற்று இருந்தால் சிகிச்சைக்கு அனுப்புகிறோம். அரசு அறிவித்தால் மட்டுமே மாவட்ட எல்லைக்குள் நுழைவது,இபாஸ் போன்றவற்றிற்கு தடை செய்ய முடியும். சுயமாக அறிவிக்க இயலாது.

ஆர்.கண்ணன், கலெக்டர், விருதுநகர்

Related posts

Leave a Comment