இதுவா அரசியல் செய்யும் நேரம்.. கும்புட்டு கேக்கறேன், மாஸ்க் போடுங்க எல்லாரும்.. விஜயபாஸ்கர் உருக்கம்

சென்னை: “இது அரசியல் செய்ய நேரமில்லை” என்று முக ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “உங்களை கும்பிட்டு கேட்டுக்கறேன்.. தயவு செய்து எல்லாரும் மாஸ்க் போடுங்க” என்று உருக்கமான வேண்டுகோளை பொதுமக்களிடம் விடுத்துள்ளார். விஜயபாஸ்கர் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “அரசு எந்த தகவலையும் மறைக்கவில்லை… எல்லா தகவலையும் அரசு வெளிப்படையாக அறிவித்து வருகிறது.. பாதிக்கப்பட்டவர்களை தேடி பிடிக்கிறோம்.

80 லட்சம் பேர் மக்கள் வசிக்கும் சென்னையில் 1,85,000 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. சரியான நேரத்தில் டெஸ்ட் செய்த காரணத்தால் தான் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது… அதேபோல, அரசு மருத்துவமனைகளிலும் எல்லா வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 17 ஆயிரம் படுக்கைகள், சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 5 ஆயிரம் படுக்கைகள், தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது… முதல்வர் காப்பீட்டு திட்டம் மற்றும் தனியார் மருத்துவமனை கட்டணம் தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிக்கப்பட்டது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படுகிறது. எங்குமே தாமதம் கிடையாது.. ரெம்டிசிவர் உள்ளிட்ட எல்லா மருந்துகளும் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சியை தமிழக அரசு வெற்றிகரமாக செய்து வருகிறது. சித்த மருத்துவம் சார்பில் ஆர்சனிக் ஆல்பம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது… மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்

அதேபோல, தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் பதிலளித்தபோது, “தொற்றினை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதால்தான் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடிந்துள்ளது… கொரோனா நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்புவது போல அரசியல் செய்ய இது நேரம் அல்ல… மக்கள் நலனை கவனத்தில் கொண்டு உயிரையும் பொருட்படுத்தாமல் பலர் உழைத்து வருகின்றனர்’ என்றார்.

தொடர்ந்து பேசும்போது, “தொற்றை கட்டுப்படுத்துவது மக்கள் கைகளில்தான் உள்ளது.. பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்.. இதை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்.. தயவு செய்து எல்லாரும் மாஸ்க் போடுங்க” என்று உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.

Related posts

Leave a Comment