சூப்பர் ஊரடங்கால் இறப்பு குறைந்தது.. உலகிற்கே இது பாடம்- முதல்வர்களுடனான மீட்டிங்கில் மோடி பெருமிதம்

டெல்லி: ஊரடங்கு உத்தரவை சிறப்பாக செயல்படுத்தி, உலகத்திலேயே குறைவான இறப்பு விகிதத்தை பராமரிக்கிறோம். பிறருக்கு நமது அனுபவங்கள் பாடமாக மாறப்போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கொரோனா பாதிப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பஞ்சாப், அசாம், கேரளா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீப் உள்ளிட்டவற்றின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை துவங்கியது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் நாளை மோடி ஆலோசிப்பார். மோடி தனது துவக்க உரையில் கூறியதை பாருங்கள்:

மக்கள் தொகை கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த இந்தியர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகும் செய்தியும் எனக்கு மகிழ்ச்சி அளிப்பது கிடையாது. இந்தியா மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. இருப்பினும், கொரோனா பரவல் பிற உலக நாடுகளை ஒப்பிட்டால் நமது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட முடியவில்லை.

முகக் கவசம் முக்கியம் முகக் கவசம் அணிவதை கடுமையாக பின்பற்ற முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிக்கடி மக்கள் தங்களது கைகளை கழுவ வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். நமக்காகவும் நமது சமூகம் மற்றும் குடும்பத்துக்காகவும் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை விகிதம் அதிகம். பிற நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவு.

பொருளாதாரம் எனவே, இந்தியா தனது பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுக்கும். பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது வீடுகளை பத்திரமாக சென்று சேர்ந்துள்ளனர். ரயில்கள், சாலை வசதி மற்றும் விமான போக்குவரத்து திறந்துவிடப்பட்டுள்ளது. முதல்வர்களின் ஆலோசனை மற்றும் யோசனைகளை வரவேற்கிறேன். இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உங்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்றுமதி அதிகரித்துள்ளது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையையும் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. வருமானம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிறு மற்றும் குறு தொழில்களை வளர்ப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் இதற்கு முக்கியமான காரணம். பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சி மீட்டெடுக்கப்படும் சில மாநிலங்களின் வளர்ச்சி முன்னோக்கி நகர்த்தி செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறை ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளை மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். வருங்காலத்திற்கான கொள்கைகளை வகுப்பதில் உங்களது ஆலோசனைகள் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

உலகிலேயே இந்தியா டாப் ஊரடங்கு உத்தரவை சிறப்பாக செயல்படுத்தி, உலகத்திலேயே குறைவான இறப்பு விகிதத்தை பராமரிக்கிறோம். பிறருக்கு நமது அனுபவங்கள் பாடமாக மாறப்போகிறது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்பதற்கான அனுமதி பெற்று தரப்பட்டுள்ளது. அவர்களின் வருமானம் உயர்த்தப்படும். நாம் எப்படி ஒற்றுமையாக இந்த கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றோம் என்பதை வருங்காலம் பேசப் போகிறது. நமது, ஒத்துழைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் மகிமையை இந்த உலகம் பாராட்டுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதன் பிறகு ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.

Related posts

Leave a Comment