யானை உடலை எரித்த விவகாரம்- வன அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யானை உடல் எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலையில் நெல்லை மாவட்ட எல்லையில் இருந்து மதுரை மாவட்டம் சாப்டூர் மலைப்பகுதி வரை சாம்பல் நிற அணில் சரணாலயம் உள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரி அலுவலகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது.

இந்த சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் மற்றும் வன விலங்குகள், அரிய வகையான சாம்பல் நிற அணில்கள் வசித்து வருகின்றன. வனப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல வனத்துறை அதிகாரிகள் எந்த நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

சாப்டூர் வன பகுதியின் மலை உச்சியில் அய்யன்கோவில் சுனை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் யானை இறந்து கிடந்து உள்ளது.

இந்தநிலையில் யானை இறந்து கிடந்த தகவல் கிடைத்ததும் சாப்டூர் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று யானை இறந்ததற்கான காரணத்தை அறியாமலும், எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தாமலும், பிரேத பரிசோதனை செய்யாமலும் யானையை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி முகமது சகாப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே வனத்துறை அதிகாரி முகமது சகாப் மற்றும் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக சாப்டூர் வன சரக அதிகாரி சீனிவாசன், வன காப்பாளர் நாராயணன், வனவர் முத்து கணேஷ், வன அலுவலக உதவியாளர் நஞ்முனிஷா ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே யானை உடல் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சீனிவாசன் உள்பட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரி முகமது சகாப் உத்தரவிட்டார். யானை எப்படி இறந்தது? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் அன்னாச்சி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் நடந்து சில நாட்களுக்குள், சாப்டூர் அருகே யானை மர்மமான முறையில் இறந்ததும், அதனை யாருக்கும் தெரியாமல் எரித்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

Leave a Comment