லடாக் மோதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழப்பு- அமெரிக்க உளவுத்துறை தகவல்

லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் சீன தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டன்:

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-சீன படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், லடாக்கில் நடந்த மோதலில் சீன தரப்பில், ராணுவத்தின் மூத்த அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வட்டார தகவலை மேற்கோள் காட்டி, அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசாங்கம் தங்கள் வீரர்கள் உயிரிழந்ததை அவமானமாக கருதுவதாகவும், எதிரிகளுக்கு தைரியமூட்டும் என்ற அச்சத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment