ஒரு நிமிடத்தில் 112 தண்டால்; சாதிக்கும் சிவகாசி இளைஞர்

விருதுநகர்:’தண்டால்’ உடல் மொத்தமும் வலுசேர்க்கும் அருமையான உடற்பயிற்சி. இதில் பலவகைகள் உள்ளன. இதன் மூலம் பல உலகசாதனைகளும் நடந்துள்ளன. இது அனைத்தையும் முறியடிக்கும் வகையில் சாதனைபுரிந்து வருகிறார் சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியை சேர்ந்த காளிராஜ் 24.

இங்குள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் பி.காம்., முடித்துள்ள இவர் சிறு வயது முதலே தண்டால் போன்ற உடற்பயிற்சிகளில் அதிக ஆர்வம் கொண்டவர். பள்ளி, கல்லுாரி காலங்களில் என்.சி.சி.,யில் இருந்ததால் உடலை பேணுவதற்காக தண்டால் பயிற்சியை அதிகளவில் செய்து வந்தார். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக தண்டால்கள் எடுத்த இவருக்கு இதில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் உருவானது. இதை தொடர்ந்து தினசரி ஒரு மணி நேரம் பயிற்சியுடன் நேரத்தையும் கணக்கீட்டு வந்துள்ளார்.

தொடர் பயிற்சியால் 2018ல் சென்னையில் நடந்த ‘கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டில்’ ஒரு நிமிடத்தில் 112 எண்ணிக்கையில் வைர ரக தண்டால் எடுத்து இதற்கு முன் 84 எடுத்திருந்த சிங்கப்பூரை சேர்ந்த ரெயின்கி யூகின்லே சாதனையை முறியடித்துள்ளார். அடுத்த ஆண்டே ‘யூனிக் வேர்டு ரெக்கார்ட்ஸ்’ நடத்திய நிகழ்ச்சியில் ஒரு நிமிடத்திற்கு 67 எண்ணிக்கையிலான ஸ்பைடர் நக்கில் தண்டால் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் கூறியதாவது: வாய்ப்பு கிடைத்தால் மேலும் அதிக சாதனை புரிவேன். தண்டால் சிறந்த உடற்பயிற்சி. இதை அனைவரும் செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும், என்றார்.

Related posts

Leave a Comment