குழந்தைகளுக்காக ஓய்வின்றி வேலை பார்க்கிறேன்!

குழந்தைகளுக்காக ஓய்வின்றி வேலை பார்க்கிறேன்!
சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ ஊழியராகப் பணியாற்றி வரும், ‘டயாலிசிஸ் டெக்னீஷியன்’ தம்பிதுரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் முழு அர்ப்பணிப்புடன், குழந்தைகள் டயாலிசிஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவரை, முதல்வர், இ.பி.எஸ்., பாராட்டியுள்ளார். அதுபற்றி அவர்: என்னோட சொந்த ஊரு தர்மபுரி மாவட்டம், நல்லம்
பள்ளியை அடுத்த மானியத அல்லி கிராம்.
பார்மா துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படிச்சேன். வேலையில சேர்ந்த புதுசுல, டயாலிசிஸ் வேலைகளைப் பாக்குறது மனசுக்குக் கஷ்டமா இருக்கும்.அதுலயும் குழந்தைகளுக்குச் செய்யும்போது, ரொம்ப பாரமா இருக்கும். அப்புறம், போகப் போக பழகிடுச்சு.
ஆரம்பத்துல குழந்தைகளுக்கு, டயாலிசிஸ் செய்யும்போது, குழந்தைங்க வலி தாங்காம அழுதா, அதைப் பார்க்க முடியாம, நான் கண்ணை மூடிக்குவேன். ஆனா, டயாலிசிஸ் செய்த பிறகு குழந்தைங்க முகத்துல சிரிப்பைப் பார்க்கும்போது, எனக்குள்ள ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்கும். அந்தச் சிரிப்புக்காக இந்த வேலையை இன்னும் அர்ப்பணிப்போடு பார்க்க ஆரம்பிச்சேன்.
வீட்டுக்கு ஒரே புள்ள நானு. ஊருல அப்பா, அம்மாவ விட்டுட்டு தனியா இங்க வேலசெஞ்சுட்டு இருக்குற எனக்கு, சிகிச்சைக்கு வர்ற குழந்தைங்க தான் சொந்தங்க. சொல்லப்போனா, அந்தக் குழந்தைகள் எல்லாருமே என் குழந்தைங்க மாதிரி. என் கூட பணியாற்றி வந்த சக மருத்துவ ஊழியர் ஒருத்தங்க, ஊரடங்கு காரணமாக வெளியூருல மாட்டிக்கிட்டாங்க. அதனால அவங்க வேலையையும் நான் சேர்த்துப் பார்க்க வேண்டிய நிலை. 70 நாள்களைத் தாண்டி, அப்டி தான் தனியாளா இங்க வேலை செஞ்சுட்டு இருக்கேன்.
நான் ஒரு நாள் விடுமுறை எடுத்தாலும், அந்நாளில், டயாலிசிஸ் செய்துக்க வர்ற குழந்தைகளின் சிகிச்சை பாதிக்கப்படும். இந்த சிகிச்சையில் தாமதம் கூடாது, அது உயிருக்கே கூட ஆபத்தாகலாம் என்பதால், நான் லீவு எடுக்கிறதைப் பத்தி நெனச்சுக்கூடப் பார்க்கிறதில்ல. வீட்டுக்குக் கூட போகாம, மருத்துவமனை நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, மருத்துவமனையிலேயே தங்கி வேலை செஞ்சுட்டு இருக்கேன்.
‘சென்னையில தான் அதிக கொரோனா பாதிப்பாம்டா… வீட்டுக்கு வந்துடுடா… ஒரு தடவ வந்துட்டாச்சும் போடா… எங்களுக்கு நீ ஒத்தப்புள்ளடா’ன்னு, ஊர்ல இருந்து அம்மாவும், அப்பாவும் சொல்லிட்டே இருக்காங்க.அதனால, அவங்களுக்கு போன் பேசுறதையே குறைச்சுட்டேன். அரசாங்கம் மருத்துவ ஊழியர்களுக்கு மாதம் ஒருமுறை கொடுக்கிற, ஒரு வார விடுமுறையையும் வேண்டாம்னு மறுத்துட்டேன்.
எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு, ‘எந்த வேல செஞ்சாலுமே அத முழு அர்ப்பணிப்போடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம செய்யணும்’னு. அதைத்தான் நான் செஞ்சிட்டிருக்கேன்!

Related posts

Leave a Comment