மூன்று அடி உயர்ந்த இரண்டு மாடி கட்டடம் : விருதுநகரில் சாதித்த ‘அப்லிப்டிங்’ தொழில்நுட்பம்

விருதுநகர்:வாழ்வில் இளைப்பாறுதல் தரும் ஒரே இடம் வீடு தான். சமீப காலமாக பழமையான வீடு, கட்டடங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுதல், தரைமட்டத்திலிருந்து உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சஞ்சீவி மலையை அனுமன் துாக்கி சென்றது போல் இன்றைய தொழில் நுட்பங்கள் வீடு, கட்டடங்களை குறிப்பிட்ட அளவு உயர்த்த, நகர்த்த முடிகிறது. விருதுநகர் ஆர்.ஆர்.,நகர் ராம்கோ வித்யாலயா எதிர்புறம் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு 10 கடைகள் இயங்கி வருகின்றன. நான்கு வழிச்சாலை அமைவதற்கு 20 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது.

நான்கு வழிச்சாலை வருகைக்கு பின் வணிக வளாகம் தாழ்ந்துவிட்டது. இதனால் மழை பெய்தால் அடிக்கடி கட்டடத்திற்குள் மழைநீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இதை நீண்ட நாட்களாக புதுப்பிக்க திட்டமிட்டிருந்த சீனிவாசன் கோவில்பட்டியை சேர்ந்த ஸ்ரீநிதி கன்ஷ்ட்ரக் ஷன் ‘அப்லிப்டிங்’ எனும் தொழில்நுட்பம் மூலம் 2 மாடி கட்டடத்தை அப்படியே 3 அடி உயர்த்தி உள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

3,600 சதுர அடி கொண்ட கட்டடத்தை 3 அடி உயர்த்தி சாதனை படைத்தது மாவட்டத்தில் இதுவே முதன் முறையாகும்.

எப்படி சாத்தியமாகிறது

தரைத்தளம், மேல்தளம் என இரு தளங்களும் 30 டன் எடை கொண்டது. பொறியாளர்கள் வளாகத்தின் சுவர், சிலாப்களின் நீள அகலத்தை பொருத்து எடையை கணக்கிட்டு ஒவ்வொரு அறையின் சுவர்களை யொட்டி 2 அடிக்கு கால்வாய் போல் பள்ளம் தோண்டுகின்றனர். பேஸ்மட்ட பக்கவாட்டு பகுதி தெரிந்ததும் அதில் உள்ள உடை கல்லை உருவி அதன் இடைவெளியில் ஜாக்கியை பொருத்துகின்றனர்.

இப்படி வளாக பேஸ்மட்டம், அடிமட்டம் இடையில் கற்களை உருவி இடைவெளி ஏற்படுத்துகின்றனர். அதில் ஜாக்கிகளை பொருத்தி மேல் பகுதிக்கும் அடிமட்டம் இடையில் மரக்கட்டைகளை கொண்டு முட்டு கொடுக்கின்றனர். இதன் பின் ஜாக்கியில் உள்ள லிவரை இயக்கி தரைமட்டத்திலிருந்து 3 அடி உயர்த்தி உள்ளனர். இதன்பின் ஜாக்கிகளை உருவி அதன் இடைவெளியில் செங்கலை வைத்து சுவர் எழுப்பி அடிமட்டத்துடன் இணைக்கின்றனர்.

பணத்தை மிச்சப்படுத்தியது

நான்கு வழிச்சாலை வருவதற்கு முன்பே கட்டடத்தை கட்டிவிட்டோம். தற்போது அடிக்கடி மழைநீர் புகுந்து விடுவதால் தரைத்தளம் சேதமடைகிறது. இதை கருத்தில் கொண்டு தரை

மட்டத்திலிருந்து 3 அடி உயர்த்த முடிவு செய்தோம். அதன்படி பொறியாளர்கள் குழுவுடன் விவாதித்தோம். எப்படியிருந்தாலும் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.10 கோடி வரை

ஆகிவிடும். ஆனால் தற்போது அப்லிப்டிங் முறைக்கு ரூ.8 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் பணம் மிச்சப்பபட்டுள்ளது.

சீனிவாசன், கட்டட உரிமையாளர், விருதுநகர்.


படிப்படியாக வளரும் தொழில்நுட்பம்

இதன் பணியில் வடமாநில தொழிலாளர்கள் பெயர் பெற்றவர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு

மதுரையில் இதே போன்று ஒரு கட்டடம் உயர்த்தப்பட்டது. தற்போது விருதுநகரில் உயர்த்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் இதுவே முதல்முறையாகும் . இதன்தொழில்நுட்பம் வெளிநாடுகளில் சாதாரணமாக நடந்தாலும், நம் நாட்டில் படிப்படியாக தான் வளர்ந்து வருகிறது.

சரவண பெருமாள், பொறியாளர்

ஸ்ரீநிதி கன்ஸ்ட்ரக் ஷன்

Related posts

Leave a Comment