சுற்றுச்சுவர் இன்றி குடிமகன்கள் கும்மாளம் தவிப்பில் டி.ஆர்.வி., சாலை பகுதி மக்கள்

அருப்புக்கோட்டை:ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்று சுவர் இல்லாததாலும் தெரு விளக்குகள் இன்றி இருளாக இருப்பதால் ‘குடிமகன்கள்’ குடித்து கும்மாளமிடுவதால் அருப்புக்கோட்டை டி.ஆர்.வி., சாலை பகுதி மக்கள் தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர். 

இப்பகுதியின் தலையாய பிரச்னையே இங்குள்ள ‘டாஸ்மாக்’ கடை தான். இதனால் இங்கு ‘குடிமகன்கள்’ தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது. இப்பகுதியை சுற்றிய கணேஷ் நகர், கஞ்சநாயக்கன்னப்படி, ஆத்திபட்டி, ஜெயராம் நகர் உள்ளிட்ட பகுதி மக்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். இதன் அருகிலே டாஸ்மாக் இருப்பதால் சிகிச்சைக்கு நோயாளிகள் அச்சத்துடனே வர வேண்டியுள்ளது. இரவில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இப்பகுதி வழியாக செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்று சுவர் இல்லாமல் பாதுகாப்பு கேள்விகுறியாகிறது. குடிமகன்கள் இங்கு வந்து குடிப்பதோடு போதையில் வராண்டா வாசலில் படுத்து விடுகின்றனர். இங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பீதியில் உள்ளனர். 

தெருவிளக்குகள் வேண்டும் 

திருச்சுழி ரோட்டிலிருந்து டி.ஆர்.வி. சாலை பகுதி தெரு விளக்குகள் இன்றி இருளாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேரத்தில் நோயாளிகள் வர அச்சப்படுகின்றனர். 

ரோடும் மோசமான நிலையில் உள்ளது. தெரு விளக்கு, ரோடு அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவக்குமார், ,தனியார் ஊழியர்

சுற்று சுவர் கட்டலாமே 

சுகாதார நிலையத்திற்கு பல பகுதி மக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் பல பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். அருகிலே டாஸ்மாக் உள்ளதால் சுற்று சுவர் கட்டி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

ராமமூர்த்தி, உரிமையாளர்,

ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் கடை

போலீஸ் ரோந்து அவசியம்

புற நகர் பகுதியாக இருப்பதால் வளர்ச்சி பணிகள் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் வந்ததால் மக்கள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகி விட்டது. டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்களை கட்டுப்படுத்த போலீசார் இரவு மற்றும் பகல் நேரத்தில் ரோந்து பணி செய்ய வேண்டும்.

பூலோக ராஜ்,உரிமையாளர், 

லாரி ஏஜென்சி

நடவடிக்கை எடுக்கப்படும் 

பகல் , இரவு நேரங்களில் கூடுதலாக ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவர். தகறாறு செய்யும் போதை ஆசாமிகள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலமுருகன், டவுண் இன்ஸ்பெக்டர் .

பணிகள் விரைவில் துவங்கும் 

சுற்று சுவர் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு மருத்துவ சுகாதார பணிகள் பிரிவிடம் கொடுக்கப் பட்டு உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கி பணிகளையும் விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

சேர்மக்கனி, நகராட்சி பொறியாளர் ……………….

Related posts

Leave a Comment