மனதை தெளிந்த நீரோடையாக்கும் யோகா இன்று உலக யோகா தினம்

யோகாவின் பிறப்பிடமே இந்தியாதான்.
பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்ட இதில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசனங்கள் உள்ளன. 2015 ஜூன் 21ல் முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாசார முக்கியத்துவ பட்டியலில் யோகா சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. யோகாவானது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய 8 நிலைகளை கொண்டுள்ளது. இந்த நிலைகளை கடந்தவர்களே யோகி ஆவார். யோகா செய்வதால் தேவையற்ற சிந்தனைகள் விலகி மனம் தெளிந்த நீரோடை போலாகிறது. யோகாவை மருத்துவமாகவும், தீர்வாகவும் பார்க்காமல் வாழ்வின் அன்றாடமாகவே கருத வேண்டும். இதை உணர்ந்தாலே உடலும், மனமும் சீராகும்.

தன்னம்பிக்கை தருகிறது

5 வயது முதல் பெற்றோரின் வழிகாட்டுதல் படி யோகா பயின்று வருகிறேன். மாநில அளவிலான போட்டியில் 3வது இடம் பெற்றேன். தற்போது தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று முடிவுக்காக காத்திருக்கிறேன். யோகா எனது உடல் ஆரோக்கியம், ஞாபகசக்தியை அதிகரித்துள்ளது. மனதை ஒருநிலைபடுத்தி ‘ஹோம்ஒர்க்கை’ உடனடியாக செய்து விடுவேன். அனைத்து செயல்களையும் செய்ய தன்னம்பிக்கை தருகிறது.கே.திவ்யபாரதி, ஷத்திரியா பெண்கள் பள்ளி விருதுநகர்.

ஆணிப்படுக்கையில் பிரார்த்தனை

யோகா விழிப்புணர்வு மக்களிடையே அமைதியாய் பரவி வருகிறது. நோய்களுக்கு தகுந்தாற் போல் யோகா பயிற்சி எடுக்கலாம். முழுங்கால், மூட்டு வலி, கழுத்து வலி, சர்க்கரை நோய், கண் குறைபாடுகள், மூச்சு திணறல் போன்வற்றை யோகா பயிற்சியால் குணப்படுத்தி விடலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமாக இருந்தால் தான் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.கொரோனா தொற்றிலிருந்து விடுபட, தொண்டை நுரையீரல் தொற்றிலிருந்து விடுபட ‘வாட்ஸ் ஆப்’ மூலம் பயிற்சி அளிக்கிறேன். உலக மக்கள் கொரோனாவிலிருந்து விடுபட கடந்த மார்ச் முதல் தினமும் 90 நிமிடம் ஆணிப்படுக்கையில் பிரார்த்தனை செய்கிறேன்.

ராஜகோபால்,

யோகா பயிற்சியாளர் ,அருப்புக்கோட்டை

அமைதி, ஆனந்தம் தரும் யோகா

யோகா என்பது மதம் சார்ந்த பயிற்சி அல்ல. முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான கலை. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிக சுலபமாய் கையாள வழி ஏற்படுத்தி கொடுக்கும். தகுந்த ஆசிரியரின் வழிகாட்டுதல் படி மேற்கொள்வதால் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. வேலை செய்யும் இடத்தில் குழுவாக பணியாற்றும் திறன், தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது. அமைதி, ஆனந்தம் நீடித்து நிலைத்திருக்க செய்கிறது.

பாலம்மாள்,

யோகா ஆசிரியை, சிவகாசி

நோய்களிலிருந்து காக்கும் மூச்சுப்பயிற்சி

மாணவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும். இளைஞர்கள் பெரும்பாலும் மனதளவில் பலவீனமானவர்களாக உள்ளனர்.

யோகா அவர்களது மனதிடத்தை ஊக்கப்படுத்தும். நவீன காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக உள்ளது. நான் 15 ஆண்டாக யோகா பயிற்றுவிக்கிறேன். தற்போது அம்பாள் மண்டபத்தில் இலவசமாக கற்று கொடுக்கிறேன். பச்சிமோத்தாசனம், ஹலாசனம் ஆசனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே நேரம் மூச்சு பயிற்சி நோய் தாக்கத்தில் இருந்து காப்பாற்றும்.

சங்கரபாண்டியன்,

யோகா ஆசிரியர், விருதுநகர்

அதிகாலை பயிற்சியால் புத்துணர்ச்சி

ஞானிகள், சித்தர்கள், மகான்கள், ரிஷிகள் வாழ்ந்த நாடு நமது பாரதநாடு. மனிதர்கள் உடல் மற்றும் மனநலத்துடன் வாழ யோகாவை உருவாக்கியவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்று நாம் மனது, உடலை கெடுத்து கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இதிலிருந்து விடுதலை அடைவதற்கு யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் கடைபிடிப்பது அவசியம்.

தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் யோகா, தியான பயிற்சி செய்வதால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சி, சுறுசுறுப்பு, மன அமைதியுடனும் வாழ்கிறேன். இன்றைய இளைஞர்கள் தினமும் ஒருமணி நேரம் கடைபிடித்தால் மன அழுத்தம் குறைந்து பணிகளில் வெற்றி பெறலாம்.

கீதாஞ்சலி,

யோகா ஆசிரியர், ஸ்ரீவில்லிபுத்துார்

ஆரோக்ய வாழ்வு வாழலாம்

உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மிக வளர்ச்சி , சமன்பாட்டிற்கு உதவிடும் ஒப்பற்ற கலையே யோகா. இது ஒரு வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் நம் நாட்டில் தோன்றி வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியே யோகா. உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்து போற்றும் ஒழுக்கங்களை பற்றிய நெறி.

இதன் பல்வேறு மரபுகள் ஹிந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. உயிர்க் கொல்லியான கொரோனா தாக்குதலில் நேயாளிகளுக்கு பிராணாயமம் பற்றிய சிகிச்சை வழங்குவதில் இருந்தே இதை அறிந்து கொள்ளலாம். நமது தலை முறைக்கும் இதன் வலிமையை கொண்டு சென்று நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.

சரண்யா,

யோகா மற்றும் இயற்கை மருத்துவர், ராஜபாளையம்

ஆசனங்களும் அதன் பயன்களும்

பிராணாயாமம்: மூச்சுத்திணறல் நீங்கும், மூளை புத்துணர்ச்சி பெறும்.

பத்மாசனம்: கவனிக்கும் திறனையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.

சர்வாங்காசனம்: தைராய்டு தொடர்பான உபாதைகள் நீங்கும்.

சிரசாசனம்: மூளை நரம்புகள், கழுத்து எலும்புகள் பலம்பெறும்.

சவாசனம்: நினைவாற்றலை அதிகரிக்கும். மன அமைதியை மேம்படுத்தும்.

புஜங்காசனம்: மலச்சிக்கல் நீங்கும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

தனுராசனம்: வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் வலிமையை அதிகரிக்கிறது.

பச்சிமோத்தாசனம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.

உட்கட்டாசனம்: கால்களை பலப்படுத்துகிறது.

Related posts

Leave a Comment