யூ டர்ன் போடும் தமிழகம்.. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக அதிகரிப்பு.. இனிதான் சேலஞ்ச்!

சென்னை: தமிழகம் மெல்ல மெல்ல ரிவர்ஸ் கியர் போட்டு வந்த பாதைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. தளர்த்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் மீண்டும் அமலுக்கு வந்து விட்டன. மண்டலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் அமலுக்கு வந்த இந்த ஊரடங்கு மிகக் கடுமையாக இருந்தது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்கு இயங்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.

கொரோனா பரவல் அதிகரிப்பு தற்போது 5வது கட்ட ஊரடங்கு காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் மிக அதிகமான தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அலுவலகங்கள் இயங்க ஆரம்பித்தன. மண்டலங்களுக்கு இடையே அரசு பஸ்கள் கூட இயங்க ஆரம்பித்து விட்டன. ஆனால் அப்போது தான் ஆரம்பித்தது பிரச்சனை. போதிய சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் பழகியதால் கொரோனா தொற்று அதி வேகமாக பரவியது. எனவே, மே 19ஆம் தேதி முதல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. முதல் ஊரடங்கு காலத்தைப் போலவே கடுமையாக இது அமலுக்கு வர ஆரம்பித்துள்ளது.

பல மாவட்டங்களில் ஊரடங்கு இதையடுத்து 24ம் தேதி அதிகாலை 12 மணி முதல் மதுரை மற்றும் அருகே உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் தேனி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக தகவல் பரவியதால் அங்கிருந்து பல மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இ பாஸ் பெற வேண்டும் கலெக்டர்களுடனான முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு, மேலும் சில கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்தன. அதாவது, மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாகவும், இனிமேல் மாவட்டங்களுக்குள் மட்டும்தான் போக்குவரத்து இயக்கப்படும். வேறு பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மூன்றாவது ஊரடங்கு காலகட்டத்திற்கு ஈடாக இப்பொழுது நாம் இருக்கிறோம்.

3வது கியர் சேலஞ்ச் அதாவது, வாகனம் பற்றி அறிந்தவர்கள் பாஷையில் கூற வேண்டுமானால், ஐந்தாவது கியரிலிருந்து இப்பொழுது மூன்றாவது கியரில் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்களை அணிவது போன்றவற்றை பின்பற்றினால் தான் மறுபடி கியர் முன் நோக்கி திருப்பப்பட முடியும். சீனா, நியூசிலாந்து போன்ற நாடுகள் இதற்கு நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன. ஆனால், ஆபத்தை உணராமல், விருந்தினர் வீடுகளுக்குக் செல்வதும், தனிமனித இடைவெளியை பராமரிக்காமல், அளவளாவி உலாவுவதும் நமது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, நம்மையும், நம்மைச் சார்ந்து இருக்கக்கூடிய மக்களின் பொருளாதாரத்தையும் முடக்கிப் போட்டுவிடும். நோயால் பாதிப்பு, பொருளாதார பாதிப்பு என கடும் பாதிப்பை தமிழகம் எதிர்கொள்ள நேரிடும். எனவே இனியும் தாமதிக்காதீர்கள். இந்த காலகட்டத்தை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது மக்களின் கையில்தான் இருக்கிறது. இதை ஒரு சேலஞ்சாக எடுத்து மக்கள் தங்களையும், வாழ்வாதாரத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்.

Related posts

Leave a Comment