விருதுநகர்:பழங்கால கலைப்பொருட்களை சேகரிப்பதும் ஒரு கலை தான். பல நுாற்றாண்டுகளை கடந்து பழமையின் பெருமைகளை பழங்கால பொருட்களே சாட்சியாக நின்று பறைசாற்றுகிறது.
அந்தவகையில் நாணயங்கள் , பல்வேறு நாட்டு ரூபாய் நோட்டுக்களை சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் அதிகம். அதையும் கடந்து கலைநயம்மிக்க பழங்கால பொருட்களை தேடி சென்று சேகரிப்பது, பாதுகாப்பது என்பது சவால்கள் நிறைந்த காரியம். சிவகாசியை சேர்ந்த ராஜராஜன் பழங்கால பொருட்களை பல ஆண்டுகளாக சேகரித்து வருகிறார்.
அரசு அருங்காட்சியகங்களில் இவரது பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இது இன்றும் மாணவர்கள், பார்வையாளர்களிடையே அதிக வரவேற்பை பெறுகிறது. கி.மு. 600 ல் சந்திரகுப்த மவுரியர் அச்சிட்ட இந்தியாவின் முதல் நாணயத்தில் துவங்கி இன்றைய ஒரு ரூபாய் சில்வர் நாணயம் வரை நாணயங்களை சேகரித்துள்ளார்.
ராஜராஜன் கூறியதாவது: தாத்தா காலத்தில் இருந்து பழமையான பொருட்களை சேகரித்து வருகிறேன்.முன்னோர்கள் பயன்படுத்திய பித்தளை, வெண்கலம், காப்பர், வெள்ளி பொருட்கள் எனது சேகரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. நான் சேகரித்துள்ள மரப்பொருட்களின் கலைநுட்பம் பிரமிப்பாக உள்ளது. பெண்களின் ஏழு பருவ காலங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெளிவை, பேரிளம் என்பதை குறிக்கும் மங்கை உருவ சிற்பம் எனது பழங்கால பொருட்கள் சேமிப்பில் முக்கிய இடம் பிடித்துள்ளது. நான் சேகரித்துள்ள பழமையான பொருட்கள் விலை மதிக்க முடியாதது. காலத்தால் அழியாத பொக்கிஷம்.
ஆண்டுக்கு ஒருமுறை இரும்பு பொருட்களுக்கும், இரண்டாண்டுக்கு ஒருமுறை மரப்பொருட்களுக்கும் பாலிஷ் போட்டு பாதுகாத்து வருகிறேன். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறேன். பழங்கால பொருட்கள் சேகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து குழந்தை களுக்கு கற்பித்து வருகிறேன். பள்ளி, கல்லுாரிகளில் அருங்காட்சியகம் அமைத்து மாணவர்களுக்கு சேகரிப்பு பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் முன்னோரின் கலை, பண்பாடு, பாரம்பரியம், ஒழுக்கம், இறை வழிபாடு, வீர விளையாட்டு என அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைக்கும், என்றார். இவரை பாராட்ட 98433 48888.