சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஒரு குஷியான செய்தி.. 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடப்பிரிவின் கீழ் படிக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளித் தேர்வுகள், கல்லூரி தேர்வுகள், போட்டித் தேர்வுகள் என ரத்து செய்யப்பட்டுவிட்டன.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதமும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதமும் தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா பேரிடர் பாதிப்பு அதிகரித்ததால் சில தேர்வுகள் மட்டுமே நடத்தப்படாமல் இருந்தது. இந்த தேர்வுகளை ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கான்வில்கார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது. அப்போது 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யவும் இன்டர்னல் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கவும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் ஊரடங்கால் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த முடியாது என தமிழகம், ஒடிஸா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எங்களிடம் தெரிவித்துள்ளன. அது போல் மற்ற மாநில அரசுகளிடம் இருந்தும் கருத்துகளை பெற்ற நிலையில் சிபிஎஸ்இ 10, 12 தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்ய முடிவு செய்யப்படுகிறது என மத்திய அரசு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment