நோயை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்: இ.பி.எஸ்.,

சென்னை:’பொது மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே, அரசின் வழிமுறைகளை பின்பற்றி, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

மாவட்ட கலெக்டர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளதாவது: சென்னையில், 87 லட்சம் பேர் வசிக்கின்றனர். குறுகலான தெருக்கள் அதிகம் உள்ளன. சிறிய வீடுகளில், அதிகம் பேர் வசிக்கின்றனர். பொது கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். இதனால், வைரஸ் தொற்று எளிதாக பரவுகிறது. கட்டுப்படுத்த, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதியில், மக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள், அவர்களின் இடத்திற்கே சென்று வழங்கப்படுகின்றன. தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பொது கழிப்பறைகள், அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன. இதற்கு, சென்னை மாநகர மக்கள், முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மாவட்டங்களில், நோய் பரவல் அதிகம் உள்ள பகுதியை, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அதிக பரிசோதனைகள் செய்ய வேண்டும். போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டும் என, சில கலெக்டர்கள் கேட்டனர்; அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பரவல் படிப்படியாக அதிகரித்து, உச்சத்தை தொட்டு, பின் படிப்படியாக குறையும் என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு தொடர்ந்து, நோய் தடுப்பு பணியை செயல்படுத்தி வருகிறது. பொது மக்கள் வெளியில் சென்றால், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். வெளியில் சென்று வரும்போது, சோப்பு போட்டு, கையை சுத்தமாக கழுவ வேண்டும். இதை செய்தால், நோய் தொற்றை தடுக்க முடியும்.பொது மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே, அரசின் வழிமுறைகளை பின்பற்றி, ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment