மக்களை வேதனை வலையில் வீழ்த்தி விடாதீர்கள்: ஸ்டாலின்

சென்னை :’கொரோனா பேரழிவில் இருந்து, மக்களை காப்பாற்றுங்கள்; மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: சென்னையில் மட்டும் அதிகம் பரவி வந்த கொரோனா தொற்று, ஒரு வாரமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதை தடுக்க வழியற்ற முதல்வர் இ.பி.எஸ்., கோவைக்கும், திருச்சிக்கும் பயணம் செல்கிறார். குடிமராமத்து பணிகளை பார்வையிடவும், இதர கட்டுமான பணிகளை பார்வையிடவும் செல்கிறார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, இதயம் மரத்து, இரக்கமற்ற தன்மை தலைக்கேறி, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையில், எதேச்சதிகாரம் பெருகி வருவதையே காட்டுகிறது.தமிழக மக்கள் இப்போது இருப்பது, மருத்துவ நிபுணர்கள் சொல்லும், கோல்டன் பீரியட்; இந்த நேரத்தில், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். உங்களது அலட்சியத்தால், அக்கறை இன்மையால், தன்னிச்சையான அணுகுமுறையால்,இந்த, 90 நாட்களையும் வீணடித்தது போல,இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள்.

கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்; வாழ்வியல் பேரிடரில் இருந்து மக்களை மீட்டுத்தாருங்கள். காலம் உங்களுக்கு இட்டிருக்கும் கடமையிலிருந்து, எப்படியாவது தப்பித்து, நழுவி விடலாம் என்று கற்பனையிலும் நினைக்காதீர்கள்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment