கொடுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி: நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

சென்னை: எமர்ஜென்சி காலத்தில் திமுக ஆட்சியை கலைத்து, அக்கட்சி நிர்வாகிகளை கொடுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன், இன்று கைகோர்த்துள்ளது. திமுகவும் காங்கிரஸ்சும் ஒரே மேடையில் கைகோர்த்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., ஆட்சியின் சாதனைகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
என்ன சாதனைகள் செய்துள்ளோம். மக்கள் நலனுக்கு என்ன செய்துள்ளோம் என்பதை மக்களிடம் எடுத்து சொல்வதற்கு கட்சிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு நல்ல வாய்ப்பு. தனது பணியை மக்களிடம் விரிவாக எடுத்து சொல்வது கடமை. அந்த கடமையை செய்வதற்கு, இந்த வருடம் கொரோனா தடையாக உள்ளது. கொரோனா காரணமாக, மக்களிடம் செல்லவும், மக்களிடம் சென்று பேசும் வாய்ப்பை தடுத்து விட்டது. பிரதமர் மோடியின் முயற்சியால், கிராமத்தில் இணையதள வசதி வந்துள்ளது. இதனால், நமதுகருத்தை மக்களிடம் வைக்க முடிகிறது. லடாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

இதே நாளில் தான், காங்கிரஸ் கட்சி, தனது பதவி ஆசைக்காக ஜனநாயகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியது. எமர்ஜென்சியை அமல்படுத்தி மக்களின் உரிமைகளை நிராகரித்தனர். பதவி மோகத்திற்காகவும், பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் எமர்ஜென்சியை கொண்டு வந்தனர். அப்போது, பல வித அராஜகங்கள் மூலம் எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்தது. அதே காங்கிரஸ், இன்று ஜனநாயகம் குறித்து பேசுவது வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட திமுக ஆட்சியை, சட்டத்திற்கு விரோதமாக பதவியில் இருந்து நீக்கியது. அக்கட்சியை சேர்ந்தவர்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறையில் அடைத்து பல வித கொடுமைகளை செய்தனர். அவர்களுக்கு பலவித தொந்தரவுகளை கொடுத்தது. ஆனால், இன்று காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து திமுக பேசுவது ஆச்சர்யமாக உள்ளது.
எமர்ஜென்சி காலத்தில், சிறையில் இருந்த திமுகவை சேர்ந்த மேயர் சிட்டிபாபு, துன்புறுத்தல் தாங்காமல் உயிரிழந்தார். ஆனால், திமுக, இன்று காங்கிரசோடு கூட்டணி அமைத்துள்ளது. எந்த விதத்தில் காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி வைத்துள்ளது என கேட்க வேண்டும். ஒரு குடும்பம், அந்த குடும்பத்திற்கு அடிமை செய்யும் தொண்டர்கள் உள்ள காங்கிரஸ் உடன் சேர்ந்த எதிர்க்கட்சியாக உள்ள திமுகவிற்கு, பேச்சுரிமை, ஜனநாயகம் குறித்து கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது. இதை பற்றி அக்கட்சி யோசிக்க வேண்டும்

மக்களின் பேராதரவு காரணமாக, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். தனி மெஜாரிட்டியுடன் இரண்டாவதுமுறை ஆட்சி அமைத்ததற்கு பிரதமர் மோடியின் சாதனையே காரணம். தனியாக வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆட்சி தான் அமைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


Related posts

Leave a Comment