எதிர்பார்ப்பு:ஊரடங்கு விதிகளை நகராட்சி, ஊராட்சிகளில் பின்பற்ற: சமூக இடைவெளி, விலகல் விதிகளுக்கு முக்கியத்துவம்

விருதுநகர்:ஊரடங்கு விதிகளை பின்பற்றுவதில் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் முழு கவனம் செலுத்தி வருகிறது. இதை பிற நகராட்சிகள், ஊராட்சிகளில் பின்பற்றினால் தான் கொரோனா தொற்று தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபட இயலும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கொரோனா தொற்றில் இருந்து விடுபட தனித்திரு, வீட்டிலிரு, விலகியிரு என மக்களிடையே அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனினும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே சமூக இடைவெளி, சமூக விலகள் உள்ளிட்ட விதிகளை பின்பற்றப்படுகிறது. தொற்றில் இருந்து முழுமையாக விடுபட மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. இதே நிலை நீடித்தால் சென்னை, மதுரையை அடுத்து விருதுநகரிலும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர் நகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டாண்டில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வருவோரிடம் ‛தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்ப அளவு சரிபார்க்கப் படுகிறது. கைகளை சோப்பு போட்டு கட்டாயம் கழுவ வேண்டும் உள்ளிட்ட விதிகள் பின்பற்றப் படுகிறது. இதையே பிற நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் பின்பற்றினால் தான் தொற்றில் இருந்து விரைவாக விடுபட இயலும். இதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

Leave a Comment