மூடு விழா காணும் எம்.டி.ஆர். சுகாதார வளாகம், பூங்கா

அருப்புக்கோட்டை:அருப்புக்கோடடை எம்.டி.ஆர்., பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத பூங்கா, கட்டி முடித்து செயல்படாத சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி 9 வது வார்டை சேர்ந்தது எம்.டி.ஆர்., பகுதி. இங்கு 8 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள முக்கிய பிரச்னை வார்டு வழியாக செல்லும் பிறமடை ஓடை தான். மழை நீர் இதன் வழியாக பெரிய கண்மாயை சென்றடையும். ஓடையை துார் வாராமல் விட்டதால் முட்புதர்களால் சூழ்ந்து கழிவு குட்டையாக மாறியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் மையாகி விட்டது.

30 அடி அகல ஓடை ஆக்கிரமிப்பாளர்களால் 3 அடியாகி விட்டது.மினிபவர் பம்ப் செயல்படாமல் உள்ளதால் பிற தேவைகளுக்கு தண்ணீரின்றி மக்கள் தவிக்கின்றனர். வாறுகாலை துார்வார துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. எம்.டி.ஆர்., பகுதியை இணைக்கும் நகராட்சி மயான ரோட்டில் நகராட்சி சார்பில் மகளிர் சுகாதார வளாகம், ரூ.20 லட்சம் மதிப்பில் பூங்கா அமைத்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. திறப்பு விழா காண அதிகாரிகளுக்கு மனம் இல்லை.

துாய்மை செய்யப்படும்

எம்.டி.ஆர்., பகுதி பிறமடை ஓடையில் துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. எனினும் சில நாட்களிலேயே மீண்டும் செடிகள் முளைத்து விடுகின்றன. தடுப்பு சுவர் கட்டி ஓடையில் துாய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

-சரவணன்

நகராட்சி சுகாதார ஆய்வாளர்

துார் வாராத ஓடை

நகராட்சி 9வது வார்டு வழியாக செல்லும் ஓடையில் முட்புதர்கள் முளைத்து, கழிவு நீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. விஷ பூச்சிகள், பாம்புகள் புகலிடமாகி விட்டது. கொசுக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. ஓடையை துார் வார வேண்டும்.

-குணசுந்தரி, குடும்ப தலைவி

பயனில்லா வளாகம்

மயான ரோட்டில் நகராட்சி சார்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு ஆண்டுகள் உருண்டோடுகிறது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. முட் புதர்கள் மண்டிய வளாகத்தை துாய்மைப்படுத்தி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனியம்மாள், குடும்ப தலைவி

பூங்கா திறக்கப்படுமா

இப்பகுதி மக்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க நடை பயிற்சிக்கான வழித்தடத்துடன் ரூ.20 லட்சம் மதிப்பில் நகராட்சி மூலம் பூங்கா அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பூங்காவை திறக்க வேண்டும்.

-மகேஸ்வரி, குடும்பதலைவி

பத்து நாளில் செயல்படும்

மயான ரோட்டில் உள்ள மகளிர் சுகாதார வளாகம், அதனருகில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது. இப்பணிகளை பத்து நாளில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

—சேர்மக்கனி, நகராட்சி பொறியாளர்

Related posts

Leave a Comment