வெளிநாடு செல்லும் அருப்புக்கோட்டை மல்லிகை: பருமனாக, மணமாக உள்ளதால் தனி கிராக்கி

அருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டையில் மல்லிகை அரும்பு விளைச்சல் அதிகமாக இருந்ததால் அக்காலத்தில் அரும்புகோட்டையாக இருந்து பேச்சுவாக்கில் அருப்புக்கோட்டையாக மாறியது.

அந்தவகையில் மல்லியால் இன்றும் அருப்புக்கோட்டை மணக்கிறது. இப் பகுதியில் இன்றும் அதிக அளவில் மல்லிகை தோட்டங்கள் உள்ளன. இதன் சுற்றுப்பகுதியான மேட்டு தொட்டியன்குளம், செம்பட்டி, பாலையம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் இப்பூக்கள் பயிரிடப்படுகிறது. மல்லிகை விளைவதற்கு இங்குள்ள செம்மண்ணும் ஏற்ற வகையில் உள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சி மடம், மண்டபம் பகுதிகளில் மல்லிகை பதியன்களை வாங்கி இங்கு பயிரிடுகின்றனர். இங்கு விளையும் மல்லிகை பருமனாகவும் மணத்துடன் இருப்பதால் அருப்புக்கோட்டை மல்லிகைக்கு என்றுமே தனி கிராக்கி உண்டு.’சென்ட்’ தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதால் ஏஜென்ட்கள் மல்லிகை பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

அருப்புக்கோட்டை பகுதிகளில் விளையும் மல்லிகையை தான் ‘மதுரை மல்லி’ என மதுரையில் விற்கின்றனர் என்பது பலரும் அறியாத விஷயம். சீஷன் நேரத்தில் தினமும் பல டன் மல்லிகை பூக்கள் இங்கு மொத்தமாக விற்கப்படுகின்றன. மழை காலம் 3 மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்களில் இங்கு பூக்கள் கிடைப்பதுண்டு. தற்போது கொரோனாவால் மல்லிகை விற்பனை படுத்து விட்டது.

திருமணம், கோயில்கள் திறக்க, சுப நிகழ்ச்சிகள் நடத்த தடை இருப்பதால் பூக்களை யாரும் அதிகம் வாங்குவதில்லை. நன்கு விளைந்தும் விலை போகாமல் உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.வெளி நாடு அனுப்பும் வியாபாரிகள்தான் தற்போது அதிக லாபம் பார்க்கின்றனர்.

எங்களுக்கு மணக்கவில்லை

பரம்பரையாக மல்லிகை விவசாயம் செய்கிறோம். உற்பத்திக்கு கஷ்டப்படுகிறோம். உரம், மருந்துகள் விலை ஏற்றம், தண்ணீர் பிரச்னை போன்றவற்றால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. மாவட்டத்தில் அரசு ‘சென்ட்’ தொழிற்சாலை அமைக்க பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். யாரும் இதற்கான முயற்சிகள் எடுக்க வில்லை. தொழிற்சாலை அமைந்தால் மல்லிகை நல்ல விலை போகும்.விவசாயிகளும் பயன் பெறுவர்.

முத்து கொயிலான்,

விவசாயி, மேட்டு தொட்டியான்குளம்

Related posts

Leave a Comment