காவலன் செயலி.. குற்றவாளிகளிடம் இருந்து மட்டுமல்ல போலீஸாரிடமிருந்தும் மக்களை காக்கும்.. ஏடிஜிபி ரவி

சென்னை: காவலன் செயலி மற்றவர்களிடம் இருந்து பொதுமக்களை காப்பதற்கு மட்டும் இல்லை. போலீஸாரிடம் இருந்து பொதுமக்களை காப்பதற்கும்தான் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறுகையில், காவலர்கள் யாரும் பொதுமக்களிடம் அத்துமீறி நடக்கக் கூடாது. அது போல் பொதுமக்களும் ஒரு சில காவல் துறையினர் இதுபோல் அத்துமீறி நடந்தால் உடனடியாக மேலதிகாரிக்கு தகவல் தெரிவியுங்கள். அப்படி முடியாவிட்டால், 100 அல்லது 112 தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யுங்கள். காவலன் ஆப் வைத்துள்ளோம். அது பொதுமக்களை பிறரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல. பொதுமக்கள் யாராவது காவலர்களால் துன்புறுத்தப்பட்டாலும் தகவல் தெரிவியுங்கள்.

போன் செய்யுங்கள் எனவே இது போன்ற சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது வீடியோ எடுத்துக் கொண்டிருக்காமல் உடனே 100 அல்லது 112-க்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்தில் இது போன்ற பிரச்சினை உள்ளது என சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினராகிய நாம் நம்முடைய கடமைகளை பொதுமக்களின் நண்பனாக செய்ய வேண்டும். அவர்கள் கொடுக்கும் சம்பளத்தில்தான் நாம் இருக்கிறோம்.

நீதி விசாரணை சாத்தான்குளம் சம்பவம் நீதி விசாரணையில் இருப்பதால் நான் அதுகுறித்து எதையும் சொல்ல முடியாது. நிச்சயமாக காவல் துறையினர் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் எனது ஜூரிஸ்டிக்ஷனில் வரவில்லை என்றாலும் கூட ஐபிஎஸ் அதிகாரி என்ற முறையில் நான் இதுகுறித்து காவலர்களுக்கு சொல்வது எனது கடமை. எனது பொறுப்பை நான் தட்டிக் கழிக்க முடியாது.

காவல் நிலையம் குழந்தைகளை எந்த சூழலிலும் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லவே கூடாது. ஒரு பள்ளிச் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதை ஒரு வீடியோவில் பார்த்தேன். 19 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் நமது சட்டையை பிடித்தாலும் தம்பி கையெடுங்கள் என ஒதுக்கிவிட்டு அறிவுரை செய்து அனுப்பி விட வேண்டும். அது போல் பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லக் கூடாது.

குற்றவாளியாக்கக் கூடாது ஒரு பெண் கொலையே செய்திருந்தாலும் இந்த சமயத்தில் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லக் கூடாது. முறையாக விசாரணை செய்து நீதிமன்றத்திற்கு தகவல் கொடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துவிடலாம். ஆனால் ஒரே ஒரு நிரபராதி சித்தரவதை செய்யப்பட்டு குற்றவாளியாக ஆக்கப்பட கூடாது என்றார்.

Related posts

Leave a Comment