டெல்லி அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள்.. பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு!

டெல்லி: ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு (Special Protection Group) கடந்த வருடம் நீக்கப்பட்டது. இந்த நிலையில் பிரியங்கா காந்தி டெல்லியில் வசித்து வந்த அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு மத்திய அரசு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

எஸ்பிஜி பாதுகாப்புக்கு கீழ் பிரியங்கா காந்தி இருந்த நிலையில் அவருக்கு டெல்லியில் லுடியென்ஸ் பகுதியில் மத்திய அரசு சார்பாக அரசு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தது. லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள வீடு எண் 35 சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. 1997 பிப்ரவரியில் இந்த வீடு சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது. இதில் பிரியங்கா காந்தி தற்போது வசித்து வருகிறது. தற்போது இந்த வீட்டில் இருந்து பிரியங்கா காந்தி வெளியேற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. பிரியங்கா காந்தி ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டும். அதோடு பிரியங்கா காந்தி 3.46 லட்சம் ரூபாயை இதற்காக மத்திய அரசிடம் செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பிரியங்கா காந்தி அந்த வீட்டில் தங்கி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக பிரியங்கா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் உங்களுக்கு இசட் + பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை. அதனால் மத்திய அரசின் கீழ் வரும் அரசு பங்களாக்களில் தங்க உங்களுக்கு அனுமதி இல்லை என்று அந்த கடிதத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. எஸ்பிஜி இசட் + பாதுகாப்பு என்பது இந்தியாவில் கொடுக்கப்படும் உயரிய பாதுகாப்பு ஆகும். எஸ்பிஜி சட்ட பிரிவு 1988ல் கடந்த வருடம்தான் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது . இதனால் பிரதமர் மோடியை தவிர வேறு யாருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு கிடையாது என்று விதி மாற்றப்பட்டது.

இதனால் 28 வருடமாக சோனியா காந்தி குடும்பத்திற்கு இருந்த எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டது. இதையடுத்து எஸ்பிஜி பாதுகாப்பு இல்லை என்பதால் அதோடு சேர்ந்து வரும் மத்திய அரசின் வீட்டையும் பிரியங்கா காந்தி இழந்துள்ளார் .

Related posts

Leave a Comment