என்எல்சி வெடி விபத்தில் 6 பேர் மரணம் – உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

சென்னை: என்என்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்எல்சி அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொதிகலன் வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உததரவிடப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் 5 அனல்மின் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனமான இதில், நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த வருடம் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் படுகாயமடைந்தனர். கடந்த மே மாதம் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் இன்று பாய்லர் வெடித்து ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகள் பழமையான இந்த அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது குற்றச்சாட்டு.

பராமரிப்பு பணிகளை ஒழுங்காக செய்தாலே உயிரிழப்புகளைத் தடுக்கலாம் என்றும் தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர்.

Related posts

Leave a Comment