சாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல்

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாட்சி கூறிய பெண் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்தார். சாத்தான்குளத்தில் போலீஸாரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் பெண் காவலர் ரேவதி நேரடி சாட்சியம் அளித்தார். இதையடுத்து தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரேவதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பும் ஊதியமும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தென் மண்டல ஐஜியாக இன்று பொறுப்பேற்ற முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காவல்துறையில் ஆங்காங்கே குறைகள் இருக்கலாம், மறுக்கவில்லை, லாக்கப் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை காவல்துறையின் நிலைப்பாடு. லாக்கப் மரணங்களை தவிர்க்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக காவல் துறையினருக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரின் வேண்டுகோளின் அவருக்கு ஊதியத்துடன் ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸாருக்கு உள்ளூர் போலீஸார் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் என்றார்.

Related posts

Leave a Comment