தொழிலதிபர் ஆவது தான் என் விருப்பம்!

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும், ‘நேரம் போகவில்லை’ என, அலறிக் கொண்டிருக்கையில், களிமண்ணில் அலங்கார நகைகள் செய்து, சம்பாதித்து கொண்டிருக்கும் கல்லுாரி மாணவி ஸ்மிருதி: சொந்த ஊர் கோவை துடியலுார். கோவையில், பி.டெக்., பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.
அப்பா, ஓய்வுபெற்ற, கல்லுாரி பேராசிரியர்; அம்மா இன்ஜினியர். அக்கா, சென்னை, ஐ.ஐ.டி.,யில் படித்து வருகிறார்.சும்மா விளையாட்டாக ஆரம்பித்தது தான் இந்த தொழில். சிறு வயதிலேயே எனக்கு, நகைகள் செய்வதில் ஆசை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, களிமண் எனப்படும், ‘டெரகோட்டா’ நகைகளை செய்யத் துவங்கி விட்டேன்.
எங்கள் வீட்டின் அருகில், பேன்சி கடை ஒன்று இருக்கும். அங்கு, நான் உருவாக்கிய களிமண் நகைகளை விற்பனைக்கும், கண்காட்சிக்கும் வைத்தேன். நிறைய பேர் ஆர்வமாக வாங்கினர். நான் உருவாக்கிய கம்மல், 80 ரூபாய்க்கு போனது.
ஆர்வம் அதிகமாகி, நிறைய செய்யத் துவங்கி, பெரிய கடைகளுக்கு, ‘சப்ளை’ செய்ய துவங்கினேன். அதற்கு முன், கோவை, ‘கொடீசியா’ போன்ற இடங்களில், டெரகோட்டா நகைகளை கண்காட்சியாக வைத்தேன்; நல்ல வரவேற்பு இருந்தது.
அதன் பின், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, எங்கள் ஊர் பெண்கள், 20 பேருக்கு, களிமண்ணில் நகைகள் செய்வது பற்றி பயிற்சி அளித்து, இப்போது விதவிதமான நகைகளை தயாரிக்கிறோம்.
‘ஷிகா கிரியேஷன்ஸ்’ என, சமூக வலைதளங்களில் தேடினால், என் தயாரிப்புகள், உங்கள் கண் முன் விரியும்.திருமணம் போன்ற முக்கியமான தருணங்களுக்கும், களிமண் நகைகளை அணிவது அதிகரித்துள்ளதால், வருமானம் நிறைய வருகிறது.
காலையில் கல்லுாரிக்கு போய் விட்டு வந்து, மாலை முதல் இரவு வரை, தனியாளாக நிறைய நகைகள் செய்துள்ளேன். அவற்றை, கடை ஒன்றை அமர்த்தி அங்கு விற்பனை செய்கிறோம்.
கல்லுாரிக்கு போன நேரத்தில், அப்பா கடையை பார்த்துக் கொள்வார். அதன் பின், நான் பார்த்துக் கொள்வேன்.எங்கள் நகைகள், 90 முதல், 1,200 ரூபாய் வரை விற்பனையாகின்றன. பல இடங்களில் இருந்தும், ‘ஆர்டர்’கள் வருகின்றன.
சமூக வலைதளங்களில், பலரும் எங்கள் நகைகளை பார்த்து, விருப்பம் தெரிவிக்கின்றனர். வாங்க விரும்புவோர், ஆர்டர்களை அனுப்புகின்றனர்.
இந்த, ‘லாக் டவுன்’ நேரத்தில், வீட்டில் நிறைய நேரம் சும்மா தான் இருக்க நேர்ந்தது. அதை பயனுள்ள வகையில் கழித்து, இந்த நேரத்தில் மட்டும், 2 லட்சம் ரூபாய்க்கு, நகைகளை விற்று
உள்ளேன். எதிர்காலத்தில், உலகம் முழுக்க, எங்கள் நகைகளை விற்று, பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என்பது தான் என் விருப்பம்

Related posts

Leave a Comment