பாருங்க.. இதற்கு பெயர்தான் டிஜிட்டல் ஸ்ட்ரைக்.. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அதிரடி பேச்சு

டெல்லி: 59 சீன செயலிகளுக்கான தடை சீனா மீது இந்தியா மேற்கொண்ட “டிஜிட்டல் ஸ்ட்ரைக்” என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வர்ணித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த வெர்சுவல் பாஜக பேரணியில் பேசிய ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் டேட்டாக்களை பாதுகாக்க செல்போன் ஆப்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக, நாட்டு மக்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்காக நாங்கள் டிக்டாக் உட்பட 59 ஆப்களை தடை செய்துள்ளோம். நமது எல்லைகளை ஆக்கிரமிக்க நினைப்பவர்களை எப்படி தடுப்பது என்பது பற்றியும், நாட்டு மக்களைப் பாதுகாப்பது பற்றியும் இந்தியாவுக்குத் தெரியும். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆனால் யாராவது கெட்ட நோக்கத்தோடு பார்த்தாலே போதும் பொருத்தமான பதிலைக் கொடுப்போம்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்ட ஒரு அறிக்கையில், பல்வேறு இடங்களிடமிருந்தும் 59 ஆப்கள் மீது பல புகார்கள் வந்தன. அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் இவை தீங்கு விளைவிக்கின்றன. பயனர்களின் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் திருடி மற்றும் மறைமுகமாக இந்தியாவுக்கு வெளியே, தங்கள் சேவையகங்களுக்கு அனுப்புகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்குள் உள்ள பாலகோட் பகுதிக்குள், கடந்த வருடம், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பிப்ரவரி மாதம், இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. இந்த நிலையில், சீன செயலிகள் மீதான தடையை டிஜிட்டல் ஸ்ட்ரைக் என வர்ணித்துள்ளார் ரவிசங்கர் பிரசாத்.

Related posts

Leave a Comment