அதிமுக புது பாய்ச்சல்.. நகரம் முதல் ஊராட்சி வரை ஐடி பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம்

சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள் மற்றும் ஊராட்சிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். தமிழக சட்டசபைக்கு வரும் 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பணிகளை செய்து வந்தன. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவியதால் கட்சிகள் அப்படியே முடங்கிக் கிடக்கின்றன.

எனினும் இந்த கொரோனா காலத்திலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் அதிமுக மற்றும் திமுக ஆகியவை தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும், மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள், ஊராட்சிகளுக்கு தலா ஒருவரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தகவல் தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும் மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள் மற்றும் ஊராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதமும் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளன.

எனவே மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment