மனதை தாலாட்டும் தெப்பக்குளம் 50 அடியிலே கிடைக்குது நிலத்தடி நீர்

விருதுநகர்:விருதுநகரில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் 1860 ல் 20 அடி ஆழம், நான்கு பக்கமும் தலா 300 மீட்டர் நீளம் கொண்ட தெப்பக்குளம் வெட்டப்பட்டது.மழை நீரை வீணாக்காமல் தெப்பத்திற்குள் வரும்படி கால்வாய் அமைத்தனர்.

தெப்பத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ததும்பி நிற்க இறைவழிபாடு நடத்துவதற்காக தெப்பத்தை சுற்றிலும் பிள்ளையார், குபேர கணபதி, சங்கடகர கணபதி, பாலதண்டாயுத பாணி, சிவன் பார்வதி பிரியாவிடை, காச்சக்காரம்மன் பெயர்களில் கோயில்கள் எழுப்பப்பட்டது. தெப்பத்திற்கான நீர் வரத்து நகருக்குள் நிலத்தடி நீரை தக்க வைத்தது. இதையொட்டிய வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கிறது.

150 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்றும் கம்பீரமாகவும், மிடுக்காகவும் காட்சியளிக்கிறது தெப்பக்குளம். ஆண்டு முழுவதும் தெப்பத்தில் தண்ணீர் தேங்கி நிற்க கடலலை போல் காட்சியளிக்கிறது. இங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க தெப்பத்திற்குள் மோட்டார் மூலம் செயற்கை அலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எந்நாளும் தண்ணீர்

பழைய மடை வழியாகவும், கவுசிக மகா நதியில் இருந்தும் தெப்பத்திற்கு மழை நீர் கொண்டு வரப்படுகிறது. இதற்கு சிகரம் வைத்தாற் போல் ஊருக்கு வட மேற்கில் சின்னமூப்பன்பட்டி

கிராமத்தில் இருந்து 4.5 ஏக்கர் நிலம், தெப்பத்தை பராமரிக்கும் பலசரக்கு மகமை தரப்பு சார்பில் வாங்கப்பட்டு அங்கு பெரிய குளம் ஒன்று வெட்டி மழை நீர் சேகரித்து தெப்பத்திற்கு கொண்டு வருவதால் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பிய தெப்பமாக காட்சியளிக்கிறது.

– ஆறுமுகசாமி, முன்னாள் கவுன்சிலர், விருதுநகர்


மகிமையால் மகிழ்ச்சி

தெப்பம் நிறைந்தால் வழியும் உபரி நீர் நகரின் தென் பகுதியில் உள்ள கிணறுகளுக்கு திருப்பி விட்டு நகரின் நிலத்தடி நீர் மட்டம் உயரும்படி பார்த்து கொள்ளப்படுகிறது. தெப்பத்தை சுற்றிய வீடுகளில் சேகரிக்கப்படும் மழை நீரும் தெப்பத்தை வந்தடைகிறது. வைகை பாயும் மதுரையின் நிலத்தடி நீர் மட்டம் 500 முதல் 900 அடிக்கும் கீழ் சென்று விட்டது. ஆனால் வறண்ட பூமியான விருதுநகரில் தெப்பத்தின் மகிமையால் நீர் மட்டம் 50 முதல் 100 அடிக்குள் காக்கப்படுகிறது.

– சங்கரவேல், சமூக ஆர்வலர், விருதுநகர்

Related posts

Leave a Comment