ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவல்?

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதிரடிப்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையானது அடர்ந்த வனப்பகுதியாகவும், பல்வேறு வன விலங்குகள் வசிப்பிடமாகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பட்டுப்பூச்சி, தாணிப்பாறை, மாவூத்து ஆகிய பகுதிகள் கேரள எல்லையில் அமைந்துள்ளன.

இந்தநிலையில் தற்போது 3 மாதங்களாக ஊரடங்கு உள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. ஆதலால் இந்த மலைப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து நெல்லை மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்பு அதிகாரிகள் மற்றும் அதிரடிப்படையினர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் மலை அடிவார பகுதிகளில் தோட்டங்கள் வைத்திருக்கும் விவசாயிகளிடம் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் வந்தார்களா? என கேட்டறிந்தனர். அப்படி யாராவது வந்தால் உடனே எங்களுக்கு தகவல் தெரிவிக்கும் படி அதிரடிப்படையினர் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமும் விசாரணை நடத்தி அவர்களின் செல்போன் எண்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

Leave a Comment