கவனியுங்க : குழாய்கள் உடைப்பால் ரோடுகளில் ஓடுது குடிநீர்; அரசு துறைகள் அலட்சியத்தால் அல்லாடும் மக்கள்

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் நகர் ,கிராம பகுதிகளில் குழாய்கள் உடைந்து வெளியேறும் குடிநீரானது ஆங்காங்கு பள்ளங்களில் தேங்கியும் ரோடுகளில் ஓடி வீணாவதால் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ளாட்சி சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிணறுகள்,மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து அதன் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது. இது தவிர தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலமாகவும் குடிநீர் சப்ளையாகிறது. குடிநீர் சப்ளைக்கான குழாய்கள் தரையின் அடியில் பதிக்கப்படுகிறது. இவைகள் தரமற்றதாக உள்ளது.

அதிக ஆழத்திலும் பதிக்கப்படுவதில்லை. மேலோட்டமாக பதித்திருப்பதால் பதிக்கப்பட்ட இடத்தில் சிறிய வாகனங்கள் சென்றால் கூட குழாய் உடைந்து விடுகிறது. இதனால் குடிநீர் வெளியேறி பள்ளங்கள் ,ரோட்டில் வீணாகிறது. இதை உடனடியாக சரி செய்வதில்லை. கோடை முடிந்தும் வெயில் கொளுத்துவதால் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ள நிலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதனால் மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நகர்புறங்களில் 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளையாகிறது. இந்நிலையில் குழாயும் உடைந்து குடிநீர் வீணாவதால் பொதுமக்களுக்கு முழுமையாக சேரவில்லை.

சிரமத்திற்கு மேல் சிரமம்

குடிநீருக்காக பதிக்கப்படும் குழாய்கள் தரமாக இல்லாததால் அடிக்கடி உடைந்து விடுகிறது. உடைந்த குழாய்களை உடனடியாகவும் சரி செய்வதும் இல்லை. தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும் இந்நேரத்தில் வருகின்ற தண்ணீரும் வீணாவதால் பொதுமக்கள்தான் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

கருப்பசாமி, தொழிலதிபர், சிவகாசி.

Related posts

Leave a Comment