காலாண்டு, அரையாண்டில், ‘ஆப்சென்ட்’டா? 10ம் வகுப்பு தேர்வில் பெயிலாகும் அபாயம்

சென்னை: காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், சில பாடங்களில் தேர்வு எழுத தவறியவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வில், தேர்ச்சி பெற முடியாத வகையில், தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1ல், ஒரு பாடத்திற்கான தேர்வு நடக்காததால், அந்தத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், 10ம்வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில், 20 சதவீத மதிப்பெண்ணும், ஒவ்வொரு பாடத்திற்கும் வழங்கி, மதிப்பெண் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டது.

வழிகாட்டு நெறிமுறை:

அதன்படி, 80 சதவீத மதிப்பெண் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள, 20 சதவீதத்துக்கு, வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, தேர்வுத்துறை இயக்குனர், பழனிசாமி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்: பள்ளிகளுக்கு நீண்ட நாள் வராதவர்கள், படிப்பை பாதியில் விட்டு விட்டு மாற்று சான்றிதழ் வாங்கியவர்கள், மரணம் அடைந்த மாணவர்கள் உள்ளிட்டோரை கணக்கிட்டு, அவர்களின் விபரங்களை தனியாக சேகரிக்க வேண்டும்.

இந்த மாணவர்களின் விபரங்கள், எந்த காரணத்திற்காகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றுவிடக்கூடாது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், அனைத்து பாட தேர்வுகளுக்கும் முழுமையாக வராதவர்கள், சில பாடங்களில் தேர்வு எழுதாதவர்கள் ஆகியோரை, ‘ஆப்சென்ட்’ பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதனால், பல மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயிலாகும் அபாயம் உள்ளது.


எதிர்காலம் பாதிப்பு:

காலாண்டு, அரையாண்டு தேர்வின் போது, உடல் நல பிரச்னை, தங்களின் ஊர்களில் நிகழ்ந்த விழாக்கள், வேறு சில நிகழ்ச்சிகள், குடும்ப பிரச்னை போன்றவற்றால், சில மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்கவில்லை. அப்படிப்பட்ட மாணவர்களை, தற்போது தேர்ச்சி பட்டியலில் சேர்க்காவிட்டால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்கள், பெற்றோர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்த, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், காலாண்டு, அரையாண்டில் சில பாடங்களில், ஆப்சென்ட் ஆன மாணவர்களை தனியாக கணக்கிடுவது தேவையற்றது. எனவே, இந்த ஆண்டு, 10ம் வகுப்பில் சேர்ந்து, காலாண்டு, அரையாண்டு தேர்வின், சில பாடங்களுக்கு தேர்வை எழுதாவிட்டாலும், பொது தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தால், அவர்கள் அனைவரையும், தேர்ச்சி பெற்றவர்களாகவே அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Related posts

Leave a Comment