ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும் – தமிழக அரசு

சென்னை: ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிலும் பழைய பாடத்திட்டமே தொடரும் என்றும் புதிய பாடத்திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்து அறிவித்துள்ளது.

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 6 பாடங்களுக்கு பதிலாக, 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், மொழிப்பாடங்கள் உட்பட மொத்தம் 500 மதிப்பெண்களுக்கான 3 முதன்மை பாடத்தொகுப்புகளை 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும், 600 மதிப்பெண்களுக்கான 4 முதன்மை பாடங்கள் திட்டமும் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள பள்ளி கல்வித்துறை, இத்திட்டத்தில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என கூறியிருந்தது.

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களையும், மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கணிதம் தவிர்த்து பிற பாடங்களை படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2020 – 21ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த புதிய பாடத்திட்டம் அமல்படுத்த முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் குழப்பமாக இருப்பதாகவும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது உள்ள சூழ்நிலையில் புதிய பாடத்திட்ட முறையை அமல்படுத்தக்கூடாது எனவும் அரசுக்கு ஆலோசனை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிலும் பழைய பாடத்திட்டமே தொடரும் என்றும் புதிய பாடத்திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் நான்கு பாடத்தொகுப்புகள் கொண்ட பாடத்திட்டமே 2020-21ஆம் கல்வியாண்டிலும் நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment