குப்பை கிடங்கில் கொய்யா தோட்டம்: மக்களை வியக்க வைக்கும் ஊராட்சி

விருதுநகர்: மரம் நிறைந்த சூழல், இதமான இயற்கை காற்று, சுத்தமான குடிநீர் ஆகியவை ஊராட்சிகளில் மட்டுமே காணக் கூடிய வரங்களாகி விட்டது.

முன்னேறிய நகரங்களில் கிடைக்காத நிம்மதி கூட கிராமங்களில் தான் கிடைக்கும். எவ்வித வாகனப்புகையும் இங்கு இல்லை. அந்த வகையில் விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேைல இத்தொழிலாளர்களை கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. குப்பை கிடங்கு தானே என நினைத்தவர்களை பசுமை பூங்காவா என வியந்து பார்க்கும் வகையில் மாற்றி உள்ளனர்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள குப்பை கிடங்கில் மக்கும், மக்கா குப்பை பிரித்து கொட்டப்படுகிறது.ஊராட்சி நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி குப்பையை தரம் பிரித்து மண்புழு உரக்கிடங்கில் கொட்டி பதப்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கின்றனர்.குப்பை கிடங்கு அமைந்துள்ள பகுதி போக மீதமுள்ள 1 ஏக்கரில் நுாற்றுக்கு மேற்பட்ட கொய்யா மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இவற்றிற்கு பதப்படுத்தி தயாரிக்கப்பட்டமண் புழு உரங்களே இடப் படுகின்றன.இதனால் மரக்கன்றுகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. நுாறு நாள் பணியாளர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதால் அப்பகுதி மக்கள் மத்தியில் வியப்பையும், பாராட்டையும் பெற்று உள்ளது ஊராட்சி நிர்வாகம்.

145 மரங்கள் வளர்ப்பு

பராமரிப்பின்றி கிடந்த குப்பை கிடங்கை வேலி அமைத்து மரம் வளர்க்க திட்டமிட்டோம். அதன் படி 100 நாள் வேலை தொழிலாளர்களை பயன்படுத்தி வேலி அமைத்தோம். தற்போது 145 மரங்கள் வரை நட்டுள்ளோம். மண்புழு உரத்தின் செழுமையால் மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

மருதுராஜ், ஊராட்சி தலைவர், சத்திரரெட்டியபட்டி

Related posts

Leave a Comment