1874 முதல் 1980 வரையிலான கடிகாரங்கள் பழமையை பாதுகாக்கும் சிவகாசி இளைஞர்

சிவகாசி: காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது. எவ்வளவு பொருள் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காதது நேரம் மட்டுமே. இப்படி நேரத்திற்கு மிகப்பெரிய பெருமை உண்டு.

பள்ளி படிப்பில் தேர்ச்சி பெறாதவனிடம் கேட்டால் ஒரு வருடத்தின் அருமை தெரியும். அதே போல் ஓட்டப் போட்டியில் தோற்றவனிடம் கேட்டால் ஒரு வினாடியின் அருமை புரியும். அன்றும் இன்றும் எப்பொழுதுமே நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏழை, பணக்காரன் என எப்படி இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் சுவர் கடிகாரம் நிச்சயமாக இருக்கும்.

அன்றைய காலத்தில் வீடு , அலுவலகங்களில் பெல் அடிக்கும் சுவர் கடிகாரங்கள் அலங்கரிக்கும். இதேபோல் டேபிள் கடிகாரங்களையும் பெரும்பாலோனோர் வைத்திருப்பர். இதன் அலாரம் சத்தத்தில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருப்பர். அத்தகைய பெருமை வாய்ந்த கடிகாரங்களை சேகரித்து வைத்துள்ளார் சிவகாசி பள்ளபட்டி இந்திரா நகரை சேர்ந்த அச்சக தொழிலாளி எட்வர்டு அந்தோணிபிரபு 31.

1874ல் பிரிட்டிசார் பயன்படுத்திய சுவர் கடிகாரங்கள் முதல் 1980ல் பயன்படுத்திய கடிகாரங்களை சேகரித்து வைத்துள்ளார். 1900 லிருந்து 1970 வரையிலான டேபிள் கடிகாரங்களை வித விதமாக சேகரித்து வைத்துள்ளார். அமெரிக்காக, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரிக்கப் பட்ட 60 வகையான கடிகாரங்கள் இவரிடம் உள்ளன. இந்த கடிகாரங்கள் இன்றைய காலத்தில் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை. ஆனால் இவர் பழுது பார்த்து பயன்பாட்டில் வைத்து உள்ளார். இது தவிர 200 க்கு மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைத்துள்ளர்.

எந்தந்த காயின் எந்த நாட்டிற்கு உரியது என தனி தனியாக வைத்துள்ளார். இதோடு இந்தியா வின் அக்கால நாணயங்கள், ரூபாய் தாள்களையும் சேகரித்துள்ளார்.எட்வர்டு அந்தோணிபிரபு கூறியதாவது: வரலாற்றில் அதிக ஆர்வம் உண்டு. கடந்த 5 வருடங்களாக பல்வேறு நாடுகளில் பயன்டுத்திய பழைய சுவர் கடிகாரங்களை சேகரித்து வருகிறேன்.

தேவைப்படுபவர்களுக்கு விலைக்கும் கொடுக்கிறேன். 14 வயதிலிருந்து 200 க்கு மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேகரித்துள்ளேன். இதன் மூலம் அந்தந்த நாடுகளில் கலாசாரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது, என்றார்.

Related posts

Leave a Comment