திமுகவை ஆக்கிரமித்தவர்…. விக் வைத்து அருவறுப்பு அரசியல்.. ஸ்டாலின் மீது வேலுமணி சரமாரி பாய்ச்சல்

சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளர் இடமாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நீண்ட பதில் அளித்துள்ளார்.

முடிந்தவர் சாதிக்கிறார் – முடியாதவர் முச்சந்தியில் நின்று போதிக்கிறார் என்பதற்கு சமகால சாட்சியாகி நிற்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தினமும், நான்கு சுவற்றுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு 4 கேமராக்களை வைத்து, பின்னிருந்து எழுதி தரும் அறிக்கைகளை பேசி நடிப்பதும், அதனை அறிக்கைகளாக வெளியிட்டு அவதூறுகள் பரப்புவதும் தான், கொள்ளை நோய் கொரானா காலத்தில் அவர் ஆற்றி வருகின்ற மக்கள் தொண்டாகும். அதே வேளையில், உண்ணவும் நினையாது, உறங்கவும் முனையாது, கொரோனாவிலிருந்து தமிழகத்து மக்களை பூரணமாய் மீட்கும் வகையில் தொடர்ந்து இரவு பகல் பாராது போராடி வருகிறார் எளிமைச் சாமானியர் அண்ணன் எடப்பாடியார்.

அதிலும் இப்போது, அறிக்கை விடுவதற்கான காரணப் பஞ்சம் அவருக்கு ஏற்பட்டிருப்பதால், நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்றம், நியமனங்கள் குறித்தெல்லாம் அறிக்கை விட்டு, அதற்காக அவர் சிபிஐ விசாரணை கேட்பதை பார்க்கும் போது, மகுடத்தின் மீது வெறிபிடித்த மனசாட்சி அற்ற காரியமாகவே தோன்றுகிறது. மத்திய அரசால், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சீர்மிகு நகரங்கள் முன்னோடித் திட்டத்தின் கீழ் அதிக அளவில் சீர்மிகு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதனை தமிழகத்திற்கு பெற்று தந்தவர் ஜெயலலிதா அவர்கள் தான்.

மாநில அரசு நிதியுடன் இணைந்து, 2015ம் ஆண்டு துவங்கி 2020 வரையில், 5 ஆண்டுகளுக்கு ரூ.10,372.93 கோடி மதிப்பீட்டில் 11 சீர்மிகு நகரங்களில் 458 திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மத்திய அரசு, ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதியுதவியும், அதற்கு இணையாக தமிழக அரசும் ரூ.500 கோடி நிதியுதவி அளித்து வருகிறது. இதற்கான அதிக அளவான ஒப்பந்தப்புள்ளிகளும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் 2015ம் ஆண்டு தொடங்கி புகழேந்தி தலைமை பொறியாளர் நகராட்சி நிர்வாகத் துறைக்கு மாறுதல் அளிக்கப்படும் முன்பே 2019ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்துள்ளது.

ஆனால், புகழேந்தி 2019ம் ஆண்டு இறுதியில் தான் நகராட்சி நிர்வாகத் துறையில் முதன்மை தலைமை பொறியாளராக பொறுப்பேற்றுள்ளார். எனவே, அவரது நியமனத்தையும், அவரது நியமனத்திற்கு முன்பே நடந்து முடிந்துவிட்ட ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடுகளை இணைத்து பழிபோடுவது மு.க.ஸ்டாலின் செய்கின்ற மன்னிக்க முடியா பாவ காரியம், அபாண்டம். தமிழக வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பிற்கும் மிக முக்கியமானதொரு திட்டம் இந்த சீர்மிகு நகரத் திட்டங்கள் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட உன்னத திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதே இந்த அரசின் நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரையில், இத்திட்டத்திற்கு, கடந்த 2016-17 முதல் 2020-21 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அரசின் பங்காக ரூ.2548 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.2200 கோடியும் ஆக மொத்தம் இத்திட்டத்திற்காக ரூ.4748 கோடி நிறைவடைந்த பணிகளுக்கும், முடிவுறும் தருவாயில் உள்ள பணிகளுக்கும் மட்டுமே நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையில் சீர்மிகு நகரத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் நடைமுறையில் உள்ள ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிகளுக்குட்பட்டு இணையதளம் வழியாக (Online Tender only) ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகிறது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் இந்தியாவிலிருந்து எந்தப் பகுதியில் இருந்தும் ஒப்பந்தப்புள்ளி இணையதளம் மூலம் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு பெறப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் தொழில் நுட்ப தகுதியினை, முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தகுதி பெற்ற ஒப்பந்தாரர்களின் ஒப்பந்தப்புள்ளிகள் ஒப்பந்தப்புள்ளி குழுவால் ஏற்கப்பட்ட பின்பு, பணி ஆணை வழங்கப்படுகிறது. இதில் எவ்விதமான முறைகேடுகளும் இல்லை என்பதை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உணரவேண்டும். இந்திய அளவில், சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் செயலாக்கத்தில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. சீர்மிகு நகரத் திட்டத்தின் மூலம் எழில்மிகு கட்டமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பான செயல்பாட்டினை மேற்கொண்டதற்கு தேசிய அளவிலான விருதினை கோயம்புத்தூர் மாநகராட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1.7.2020 அன்று கூட சீர்மிகு நகரத் திட்டங்களின் கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளம் சீரமைப்பு பணிகள், இந்திய நாட்டில் சீர்மிகு நகரத் திட்டம் நடைபெறும் மாநிலங்களுக்கெல்லாம் இப்பணிகள் முன்னோடியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது என மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு.துர்கா ஷங்கர் மிஷ்ரா இஆப., அவர்கள் பாராட்டியுள்ளார். மேலும், கடந்த 9 ஆண்டுகளில், இந்திய அளவில் உள்ளாட்சித் துறை அதிகமான சாதனைகளை படைத்துள்ளது. அவற்றில் சில:- நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இதுவரை 16.28 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகமானதாகும். ஊரகப் பகுதிகளில் இதுவரை 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ், 2011 -12 ஆம் ஆண்டு முதல், 2019 -2020 ஆம் ஆண்டு வரையில் 9291 கி.மீ நீளமுள்ள 3592 சாலைப் பணிகள் மற்றும் 132 பாலங்கள் ரூ. 4258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment