அரசு அதிரடி.. ஜூலை 13 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்- செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் மற்றும் வகுப்புகள் தடைபட்டுள்ளன. எனவே தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியில் வகுப்புகள் எடுக்க துவங்கியுள்ளன.

எதற்காக ஆன்லைன் வகுப்புகள்? பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க மாணவர்களிடம் கட்டணம் பெறுவது அவசியம் என்பதால், ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தமிழக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனியார்கள் ஆர்வம் மத்திய அரசு விரைவில் ஆன்லைன் வகுப்புகளுக்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவிக்க உள்ளது. இந்த வருடம் முழுக்க பள்ளி, கல்லூரிகளை திறப்பது சாத்தியமில்லாத வேலை என்பதை புரிந்து கொண்டு கல்வி நிறுவனங்களும், மத்திய அரசும், ஆன்லைன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளன.

ஆன்லைன் வகுப்புக்கு தடை இல்லை தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி செயல்படுத்தி வருவதற்கு தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தமிழக அரசு முடிவு செய்துவிட்டது போலும். ஜுலை 13 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை துவக்கி வைப்பாராம்.

திடீர் அறிவிப்பு ஆன்லைன் முறையில் மாணவ மாணவிகளுக்கு பாடங்களைக் கற்பிப்பதற்காக பல புதிய விதிகளை வகுக்க வேண்டும், சில கட்டுப்பாடுகளுடன் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறலாம் என்று பெற்றோர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சிறு குழந்தைகளுக்கு இந்த ஆன்லைன் கல்வி தேவையில்லை என்றும் பெற்றோர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை வகுத்து, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி வழங்கப்படுவதாக இன்று செங்கோட்டையன் திடீரென அறிவித்திருக்கிறார்.

முடிவில் உறுதி? ஏற்கனவே பல்வேறு கல்வி சார்ந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பிறகு வாபஸ் பெறப்பட்டன. தமிழக அரசிலேயே சமீபத்தில் அதிக முடிவுகளை வாபஸ் பெற்றது கல்வித்துறைதான். எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் முடிவில் அரசு உறுதியாக இருக்குமா என்பதை வரும் காலங்களில் பார்க்க வேண்டும்.

நடைமுறை சிக்கல் அதிகப்படியாக ஏழை மாணவர்கள், அடித்தட்டு மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் இல்லாத பெற்றோர்களின் குழந்தைகள்தான் இப்போதெல்லாம் அரசு பள்ளிகளில் பயில்கிறார்கள். அவர்களை ஆன்லைன் வகுப்புகள் எப்படி சென்று சேரும் என்பது மிகப்பெரிய சவால்.

Related posts

Leave a Comment