கிராமத்து மின்னல்.. வறுமையிலிருந்து விடுபட இதுதான் ஒரே வழி.. இது ராஜ்வீந்தர் கெளரின் கதை

டெல்லி: ராஜ்வீந்தர் கெளர்.. குக்கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்.. போராளி.. வீராங்கனை. வீட்டு வேலைகளுக்காக மட்டுமே பிறந்தவர்கள் பெண்கள் என்ற கலாச்சாரத்தில் பிறந்த ராஜ்வீந்தர் கெளர் இன்று ஒரு அருமையான ஹாக்கி வீராங்கனையாக மலர்ந்து நிற்கிறார். பஞ்சாப் மாநிலம் தரன் தரன் மாவட்டத்தின் முகல் சாக் என்ற கிராமத்தில் பிறந்தவர்தான் கெளர். மூன்று அக்காக்கள், ஒரு தம்பி என பெரிய குடும்பம். அப்பா ஆட்டோ டிரைவர். வறுமைதான் குடும்பத்தின் மூத்த உறுப்பினர். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவரான ராஜ்வீந்தர் கெளருக்கு சிறு வயது முதலே ஹாக்கிதான் கனவு. அந்தக் கனவை தனது வறுமையுடன் இணைந்து துரத்தினார். இன்று சிறந்த ஹாக்கி வீராங்கனையாக ஜொலிக்கிறார். ஆனால் கூடவே சுற்றிக் கொண்டிருக்கும் குடும்பத்து வறுமையை துரத்தியடிக்க இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் காத்து நிற்கிறார்.

பெரும் குடும்பம் அக்காக்களுடன் இணைந்து கெளரும் சிறு வயதில் அக்கம் பக்கத்து பண்ணைகளுக்கு வேலைக்குப் போவது வழக்கம். அந்த கூலிதான் குடும்பத்து சாப்பாட்டுப் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு. படிப்பதற்கு ஆசை இருந்தாலும் அதற்கு வீட்டு நிலைமை இடம் தரவில்லை. இதில் ஹாக்கி மோகம் வேறு வந்து மனதை அரிக்க ஆரம்பித்ததது.படிக்கவே வழியில்லை. இதில் விளையாட எங்கே போவது.

குடும்பத்தில் வறுமை அப்பா ஆட்டோ டிரைவர் என்பதால் நிரந்தர வருமானம் கிடையாது. அம்மாவும் இல்லத்தரசி. ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பாடு என்பது ஆடம்பரம் என்ற நிலையில் குடும்ப சூழல் இருந்தது. இந்த நிலையில்தான் கெளருக்கு தனது பள்ளிக்கூட சீனியர்கள் மூலம் ஒரு ஒளி கிடைத்தது. நீ ஹாக்கியை விடாதே.. அது உனக்கு நல்ல வழியைக் காட்டும் என்று ஊக்குவித்தனர். இதனால் புது உத்வேகம் கொண்டார் கெளர்.

கெளரின் ஆசை “நான் தடகள வீராங்கனையாக விரும்பினேன். நல்லா ஓடுவேன். 9வது வகுப்பு படித்தபோது நான்தான் அதி வேகமாக ஓடுவேன். இதனால் எனது சீனியர்கள் என்னை ஹாக்கி விளையாட வற்புறுத்தினர். இதனால் நான் ஹாக்கி பக்கம் திரும்பினேன் என்றார் ராஜ்வீந்தர் கெளர். அதன் பின்னர் அவரது வாழக்கையில் புதிய திருப்பம் ஏற்படத் தொடங்கியது. அவர் ஒரு ஸ்டிரைக்கராக உருவெடுக்க ஆரம்பித்தார். அவரது ஸ்டைல் பயிற்சியாளரைக் கவர்ந்தது.

பெரும் நம்பிக்கை அவருக்குள் இயல்பாக இருந்த விளையாட்டு வீராங்கனை அசாதாரண ஒருவராக அவரை மாற்ற உதவினார். தேசிய தேர்வாளர்களின் பார்வையிலும் விழுந்தார் கெளர். இதோ இன்று சீனியர் மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் உத்தேசப் பட்டியலில் ஒருவராக இடம் பிடித்துள்ளார் ராஜ்வீந்தர் கெளர். 21 வயதான கெளருக்கு இப்போது பெரும் நம்பிக்கை வந்து விட்டது. தனது கஷ்டம் மட்டுமல்லாமல் குடும்பத்தின் நிலையும் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை அவருக்குள் வந்து விட்டது

வாய்ப்பு வரட்டும் 2015ம் ஆண்டு அவர் ஜூனியர் தேசிய முகாமில் தேர்வானார். மலேசியாவில் 2016ல் நடந்த 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியா கோப்பைப் போட்டியில் ஆடினார். 2017ல் சீனியர் தேசிய முகாமுக்கு அழைக்கப்பட்டார். மூத்த வீராங்கனைகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அனைவருமே தன்னைப் போல கஷ்டமான பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பதை அறிந்து இன்னும் நம்பிக்கை கூடியது.

கெளர் கனவு நனவாகுமா தற்போது ராஜ்வீந்தர் கெளரின் ஒரே கனவு இந்திய சீனியர் அணியில் இடம் பெறுவது என்பது மட்டுமே. 2017முதல் அதற்காக பொறுமையுடன் காத்திருக்கிறார் ராஜ்வீந்தர் கெளர். நிச்சயம் தனது கனவு நிறைவேறும். அது நிறைவேறினால் மட்டுமே தனது குடும்ப சூழல் மாறும் என்பது ராஜ்வீந்தர் கெளரின் திட்டமான நம்பிக்கை. அதற்காக அவர் பொறுமையுடன் காத்திருக்கிறார்.

ஆங்கிலம் பேச கத்துக்கிட்டேன் எனது பெயர் பலமுறை சீனியர் அணியில் இடம் பெறாமல் போனபோதெல்லாம் ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். ஆனால் நம்பிக்கையை விட்டு விடவில்லை. இன்னும் எனக்கான நேரம் இருப்பதாக நான் கருதுகிறேன். நிச்சயம் நான் அணியில் இடம்பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராஜ்வீந்தர் கெளர். தற்போது கிடைத்துள்ள லாக்டவுன் பிரேக்கைப் பயன்படுத்தி ஆங்கிலம் பேச கற்றுக் கொண்டுள்ளார் ராஜ்வீந்தர் கெளர். அதுவும் முக்கியமாயாச்சே. வீட்டு கண்ணாடி முன்பு நின்று பேசிப் பழகிக் கொண்டதாக புன்னகையுடன் சொல்கிறார். பிரமிக்க வைக்கும் இந்த கிராமத்து மின்னல் விரைவில் ஹாக்கி உலகில் புயலாக புகுந்து கலக்க வாழ்த்துவோம்.

Related posts

Leave a Comment