அரசை மட்டும் குறை கூறக்கூடாது… நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்

சென்னை: கொரோனா பரவல் தொடர்பாக அரசை மட்டும் குறைக்கூடாது என்றும் நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் எனவும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும், தனது சேவ் சக்தி (save shakthi) அமைப்பு மூலம் சென்னை முழுவதும் ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளியோருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

சமூக அவலங்கள் நடிகை வரலட்சுமி சரத்குமாரை பொறுத்தவரை சமூக அவலங்கள் குறித்து தொடர்ச்சியாக தனது கருத்துக்களை எடுத்துக் கூறுபவர். சாத்தான்குளம் விவகாரமாக இருந்தாலும் சரி அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்ட் விவகாரமாக இருந்தாலும் சரி மனதில் தோன்றியதை தைரியமாக பேசக்கூடியவர். அதேபோல் பெண்ணுரிமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, உள்ளிட்டவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வரலட்சுமி சரத்குமார் சேவ் சக்தி (save shakthi) அமைப்பை நடத்தி வருகிறார்

உணவு பொட்டலங்கள் இந்த அமைப்பின் மூலம் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் பீகார், ஜார்கண்ட், ஒடிஸா, மேற்குவங்காளம் என சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். தனது சொந்த நிதியில் இருந்து இந்த அறப்பணியை அவர் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் செல்லவிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்காக உணவு பொட்டலங்களை தயார் செய்து அதனை வரலட்சுமி சரத்குமாரே நேரடியாக வழங்கினார்.

பணமில்லை புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் மூலம்சொந்த மாநிலங்களுக்கு செல்ல குறைந்த 2 நாட்களாவது ஆகக்கூடும். ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வருவாயின்றி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் உணவுக்கு சிரமப்படக் கூடாது, பசியோடு வாடக்கூடாது என்பதற்காக சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகளை பேக்கிங் செய்து வரலட்சுமி சரத்குமாரின் சேவ் சக்தி அமைப்பினர் விநியோகம் செய்தனர்.

பொறுப்புணர்வு தேவை இதனிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வரலட்சுமி சரத்குமார், கொரோனா பரவலுக்கு அரசை மட்டும் குறை கூறக்கூடாது என்றும், நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் எனத் தெரிவித்தார். சமூக இடைவெளியை பேணி முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வரலட்சுமி சரத்குமார் கேட்டுக்கொண்டார். அரசியலில் ஆர்வம் காட்டும் இவர் பின்னாட்களில் தனது தந்தையை போல் அரசியல்வாதியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Related posts

Leave a Comment