ஊராரின் ஊரடங்கு; இப்படியும் ஓர் கிராமம்

தளவாய்புரம்:தளவாய்புரம் அருகே மீனாட்சியாபுரத்தில் 30 வயது கர்ப்பிணி ,33 வயது இளைஞருக்கு தொற்று உறுதியாக கிராமத்தினரே ஒன்று கூடி ஊரடங்கு அறிவித்து அதை முறையாகவும் பின்பற்றுகின்றனர்.

ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள், 15 தெருக்கள், நுாற்றுக்கு மேற்பட்ட கடைகள் கொண்ட இங்கு மேலும் தொற்று பரவலை தடுக்க ஒன்று கூடினர் ஊரார். ஏழு நாட்களுக்கு இவர்களே ஊரடங்கு அறிவித்தனர்.அதன்படி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய பணிகளை தவிர எதற்கும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

பூட்டப்பட்ட கடைகள், கலையரங்கம் முன்பு யாரும் உட்கார்ந்து அரட்டை அடிக்காமல் இருக்க சீமை கருவேல முள் செடிகளை கொண்டு தடுப்பும் ஏற்படுத்தி உள்ளனர். ஊரின் நுழைவு பகுதி சிமென்ட இருக்கைகளும் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்புக்காக தினமும் ஊரார் சார்பில் கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது.ஊர்கூடி எடுத்த முடிவை அனைவரும் ஒருமனதாக ஏற்று கட்டுப்பாட்டை பின்பற்றி வருவதாக இப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் நவமணி தெரிவித்தார். கொரோனாவை விரட்ட இவ்ஊர் மக்களின் கட்டுப்பாடு மற்ற ஊர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

Related posts

Leave a Comment