கொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி

கொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படுவோரில், முதியோர் மத்தியில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க, அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

முதியோர் பாதிப்பு தமிழக முதல்வர் தலைமையில், கொரோனா நோய் தொற்றை தடுக்கும் சிகிச்சை அளிக்க, பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த நோய்கள் போன்ற நோய்களால் முதியோர் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

பிசிஜி தடுப்பூசி இந்த நிலையில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கடந்த 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோய் விகிதமும், உயிரிழப்பு விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

முதல்வர் அனுமதி மேற்கூறிய காரணங்களில் அடிப்படையிலும், கொரோனாவுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும், முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்தி, அதன் செயல்திறனை ஆராய்ச்சி செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு அரசின் அனுமதி கோரியிருந்தது. உடனடியாக வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சோதனை முயற்சியை ஐசிஎம்ஆர், நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் விரைவில் தொடங்க உள்ளது.

முதியோருக்கு பாதுகாப்பு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோயின் தீவிரத் தன்மையை குறைக்கவும், மருத்துவமனையில் அனுமதி தவிர்க்கவும், உயிரிழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும். தமிழக முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள், தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றி எச்சரிக்கை அதேநேரம் இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறிவிட முடியாது என்கிறார்கள் மருத்துவ துறை வல்லுநர்கள். உடலில் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் நிலையில், இந்த மருந்தை உட்செலுத்தும்போது அது சில பக்க விளைவுகளை முதியோருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த தடுப்பூசியை செலுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் முதியவர்களின் உடல்நிலையில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசியம். ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, ஊசி மருந்து செலுத்துவதே, சரியானதாக இருக்கும், என்ற எச்சரிக்கையை மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Related posts

Leave a Comment