தவத்தை கலைத்ததால் ஊரே ‘வெறிச்’

விருதுநகர்:சிவனை வழிப்பட்டு முக்தி அடைந்தவர்கள் சித்தர்கள், முனிவர்களாக உள்ளனர் . இவர்கள் பெயரில் ஆங்காங்கு கோயில்களும் உள்ளன. அதன்படி சாத்துார் நடுவப்பட்டியில் சற்குருநாதர் சுவாமிகள் கோயில் உள்ளது. இங்கு எழுந்தருளி உள்ள சுவாமிகளின் இயற்பெயர் காளியப்பர்.

1870 ல் நடுவப்பட்டியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே சிவ வழிபாட்டில் ஈடுபட்ட இவர் ஜீவசமாதி அடைவதற்காக 48 நாட்கள் பூமிக்கடியில் தவம் இருக்க போவதாக கூறினார். தற்போது அங்கு மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் தான் ஆழக்குழி தோண்டி மண் குவலயத்தில் அமர வைத்தனர். நண்பர்கள் இருவரும் இவருக்காக காவல் இருந்தனர். 20 நாட்கள் பின் வேலை காரணமாக இருவரும் சாத்துார் சென்று விட ஊர்மக்கள் அவரது தவத்தை கலைத்தனர்.

கோபம் கொண்ட காளியப்பர் அங்கிருந்து சென்றார். அன்றிலிருந்து இன்று வரை நடுவப்பட்டியில் சரியாக மழையே பெய்வதில்லை என்கின்றனர் அவ்வூர் மக்கள் . காளியப்பரோ தேனி மாவட்டம் எம்.சுப்புலாபுரத்தில் தஞ்சமடைந்தார். அம்மக்கள் அவரை நன்றாக உபசரித்ததால் அந்த கிராமம் தற்போது செழிப்பாக உள்ளதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

இதே போன்று திருச்சி திருவானைக்காவல், வெள்ளனுார் உள்ளிட்ட பல இடங்களில் தவம் செய்து இறுதியாக கோவை வெள்ளியங்கிரி மலையில் முக்தி அடைந்தார். நடுவப்பட்டியில் உள்ள இவரது இல்லம் தற்போது காலியிடமாக உள்ளது. சற்குரு சுவாமிகளாக மாறிய காளியப்பரை நினைவு கூறும் வகையில் அவர் தவம் செய்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. களையிழந்த கிராமத்திற்கு தற்போது இக்கோயில் மட்டுமே உயிரூட்டுகிறது.

இங்கு ஆவணி திருவோணம் நட்சத்திரத்தில் குருபூஜை, பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடுடன் அன்னதானமும் நடக்கிறது.விவசாயம் போச்சு சற்குரு சாமிகள் சென்ற பின் எங்கள் பகுதியில் மழை அதிகளவில் இல்லை. விவசாயமும் கைவிட்டதால் பிழைப்புக்காக பலர் வெளியூர் சென்று விட்டனர்.சுப்புராஜ், உறவினர்

கோயிலால் உயிர் பெறுகிறது ஊர்

ஒவ்வொரு குருபூஜை அன்றும் ஆயிரக்கணக்கானோர் வணங்கி செல்கின்றனர். களையிழந்த எங்கள் கிராமம் தற்போது சற்குரு கோயிலால் உயிர் பெற்றுவிட்டது. இருந்தாலும் மழைதான் இன்னும் பாராமுகம் காட்டுகிறது.

வீராச்சாமி ஓய்வு ஆசிரியர்

Related posts

Leave a Comment