கவலையே படாதீங்க வீரர்களே.. மன நல ஆலோசகர் வர்றார்.. அசத்தும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா

மெல்போர்ன்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா எனப்படும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களின் உடல் நலம் மற்றும் மன நலம் தொடர்பான ஆலோசனைகளுக்காக ஒரு நிபுணரை நியமிக்கவுள்ளது. இப்படி ஒரு நிபுணரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நியமிப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது கொரோனா காரணமாக போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. ஆனால் விரைவில் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தயாராகி வருகிறது. ஆனால் தொடர்ந்து வீடுகளில் முடங்கிப் போயிருந்த காரணத்தால் வீரர்களின் உடல் நலம் மற்றும் மன நலம் முழு அளவில் இல்லை. அவர்களை மறுபடியும் பழைய பாணிக்குக் கொண்டு வர நிறைய செய்ய வேண்டியுள்ளது.

கிளன் மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு கிளன் மேக்ஸ்வெல் உள்பட 3 வீரர்கள் மன நல பிரச்சினை காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலை மீண்டும் வராமல் தடுக்க அதற்கென ஒரு நிபுணரை நியமிக்க முடிவு செய்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. கடந்த வாரம் இதுதொடர்பான நிபுணர் தேவை என்ற விளம்பரத்தையும் அது போட்டது. புதிதாக நியமிக்கப்படும் நிபுணர், வாரியத்தின் விளையாட்டு, அறிவியல் மற்றும் மருத்துவப் பிரிவு தலைவரான அலெக்ஸ் கோன்டோரிஸிடம் ரிப்போர்ட் செய்வார்.

ஆஸ்திரேலியா வீரர்கள் இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் ட்ரூ கின் கூறுகையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் வீரர்கள் மற்றும் தேவைப்படும் அனைவருக்கும் இந்த புதிய நிபுணர் தேவையான ஆலோசனைகளை வழங்குவார். அவரது பங்களிப்பு வீரர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றார். தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் மைக்கேல் லாயிட் மற்றும் பீட்டர் கிளார்க் என இரு சைக்காலஜிஸ்ட்டுகள் உள்ளனர். இதில் ஆண்கள் அணிக்கு லாயிடும், மகளிர் அணிக்கு பீட்டரும் கவனிக்கிறார்கள்.

உளைச்சல் ஆனால் தற்போதைய கொரோனா குழப்பம் காரணமாக வீரர்கள் பலரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். எதிர்காலம் பலருக்கும் குழப்பமாக மாறியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் வேறு நடக்கவில்லை என்பதால் பெரும் பண இழப்பை அனைவருமே சந்திக்க வேண்டியுள்ளது. இப்படி பலமுனை குழப்பம் இருப்பதால் புதிய நிபுணரைத் தேட ஆரம்பித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

குழப்பம் ஏன்? கடந்த ஆண்டு குறிப்பிட விரும்பாத மன நல காரணங்களுக்காக இளம் வீரர் நிக் மாடின்சன், வில் புகோஸவ்ஸ்கி மற்றும் சீனியர் வீரர் மேக்ஸ்வெல் ஆகியோர் விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருக்க நேரிட்டது. பெர்சனல் மற்றும் விளையாட்டு தொடர்பான குழப்பங்களால் இவர்கள் உளைச்சலுக்குள்ளானார்கள் என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

Related posts

Leave a Comment