சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – நாடுமுழுவதும் 91.46 சதவிகிதம் பேர் தேர்ச்சி

சென்னை: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in. என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.46 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.36 சதவீதம் அதிகமாகும். நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற்றன. சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று உறுதிப்படுத்தினார். காலை முதலே மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் சற்றுமுன்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.nic.in, cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ள அமைச்சர், ஆரோக்கியத்திற்கும் தகுதியான கல்விக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்த 18,85,885 மாணவர்களில் 18,73,015 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 17,13,121 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 91.46 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.36 சதவீதம் அதிகமாகும். மாணவிகளைப் பொறுத்தவரை தேர்ச்சி விகிதம் 93.31 ஆகவும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90.14 ஆகவும் உள்ளது. மாற்றுப் பாலின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 78.95 ஆக உள்ளது. இந்த ஆண்டு மெரிட் பட்டியலோ, மதிப்பெண்களோ வெளியிடப்படவில்லை. கிரேடு முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மண்டலவாரியாக மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்:

திருவனந்தபுரம் – 99.28 சதவிகிதம் சென்னை – 98.95 சதவிகிதம் பெங்களூரு – 98.23 சதவிகிதம் புனே – 98.05 சதவிகிதம் அஜ்மர் – 96.93 சதவிகிதம் புவனேஷ்வர் – 93.20 சதவிகிதம் போபால் – 92.86 சதவிகிதம் சண்டிகர் – 91.83 சதவிகிதம் பாட்னா – 90.69 சதவிகிதம் டேராடூன் – 89.72 சதவிகிதம் பிரக்யாராஜ் – 89.12 சதவிகிதம் நொய்டா – 87.51 சதவிகிதம் டெல்லி மேற்கு – 85.96 சதவிகிதம் டெல்லி கிழக்கு – 85.79 சதவிகிதம் கவுகாத்தி – 79.12 சதவிகிதம்

Related posts

Leave a Comment