தலைவராக ராகுல் இல்லை… எனக்கு நெருக்கடியும் அதிகரித்தது… மனம் திறந்த சச்சின் பைலட்!!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகிய பின்னர் கடந்த ஓராண்டாக முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் இருந்து நான் எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன் என்று ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, தனது ஆதரவாளர்கள் 30 பேருடன் கட்சியில் இருந்து வெளியேறி, கட்சி தலைமைக்கு சச்சின் அழுத்தம் கொடுத்தார். இரண்டு முறை நடந்த காங்கிரஸ் சட்டமன்ற எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால், சச்சின் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று துணை முதல்வர் மற்றும் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களாக இருந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் நீக்கப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ் தலைவரும் நீக்கப்பட்டார்.

இவருக்கு பின்னணியில் இருந்து இயக்குவது பாஜக என்று முதல்வர் அசோக் கெலாட் நேற்று பேட்டி அளித்து இருந்தார். இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு சச்சின் பைலட் அளித்திருக்கும் பேட்டியில், ”காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்தாண்டு ராகுல் காந்தி விலகினார். இவர் விலகிய பின்னர் அசோக் கெலாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை அவமரியாதை செய்தனர். சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள சிரமப்பட்டேன்.

எனக்கு அசோக் கெலாட் மீது கோபம் இல்லை. எனக்கு சிறப்பு அதிகாரம் வேண்டும் என்று கேட்கவில்லை. நான் கேட்பது எல்லாம் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு என்னையும், எனது ஆதரவாளர்களையும் செயல்பட விடாமல் தடுத்தனர். என்னுடைய உத்தரவுகளை அமல்படுத்த வேண்டாம் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆவணங்களை எனக்கு அனுப்புவதில்லை. அமைச்சரவைக் கூட்டம், காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டம் பல மாதங்களாக கூட்டப்படவில்லை. தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் தடுத்தால், அதற்கு எதற்கு எனக்கு ஒரு பதவி. இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் பொறுப்பாளருக்கும் தெரிவித்து விட்டேன், அசோக் கெலாட்டிடமும் கூறினேன். கலந்துரையாட, விவாதம் செய்வதற்கு என்று எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

Related posts

Leave a Comment