இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி

அருப்புக்கோட்டை:இன்றைய சூழ்நிலையில் அவரவர் வேலைகளை பார்க்கவே நேரம் இல்லாமல் எந்நேரமும் ‘பிசி’ யாகவே உள்ளனர். சொந்த பணிகளை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். மனிதநேயம், பிறருக்கு உதவுதல், விட்டு கொடுக்கும் மனப்பான்மை குறைந்து கொண்டே செல்கிறது.

போட்டிகள் நிறைந்த உலகில் ஏதாவது ஒன்றிற்காக ஓடி கொண்டே இருக்கிறோம்.எந்நேரமும் பரபரப்பு, டென்ஷன் நிறைந்தவர்களாகவே பலர் உள்ளனர். நாம் உண்டு நம் வேலையுண்டு என்று இருக்கும் இக்கால கட்டத்தில் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து பல ஆண்டுகளாக ரத்த தானம், இயலதாவர்களுக்கு உதவி, ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம், புற்று நோய் பாதித்தவர்களுக்கு உதவி, விபத்தில் சிக்கி கொண்டவர்களுக்கு உடனடி உதவி என பல ‘மல்டிஹெல்ப்’ மனம் கொண்டவர் தான் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் துரை. பிரிதிவிராஜ்.

இன்றைய கொரோனா கால கட்டத்திலும் கூட பல உதவிகளை செய்து வருகிறார். அரசுப் பணியில் நேர்மையானவர் என்ற பெயர்எடுத்த இவர் ‘லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்’ என்ற வாசகத்தை தான் உட்காரும் இடத்தில் வைத்துள்ளார்.கர்ப்பிணிகள், மாணவர்கள், மாற்று திறனாளிகள், முதியோர்கள் யாரும் இவர் அலுவலகத்திற்கு வர வேண்டியது இல்லை. இவரே அவர்களை தேடி சென்று கேட்கும் சான்றிதழ்களை வழங்குகிறார்.

தன் தம்பியின் நினைவாக ‘ராஜேஸ் உதவும் கரங்கள் அறக்கட்டளை’ ‘அப்துல் கலாம் மன நிறைவு இல்லம்’ ஏற்படுத்தி இவற்றின் மூலம் விபத்து ஏற்படும் காலத்தில் கட்டணம் இல்லா ஆம்புலன்ஸ் மூலம் விபத்து நேர்ந்தவர்ளை உடனுக்குடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பல உயிர்களை காப்பாற்றி உள்ளார்.

ஏற்கெனவே ஒரு படுக்கை கொண்ட ஆம்புலன்ஸ் இருக்கும் போது தற்போது நான்கு படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் வாங்கி மக்களுக்கு சேவையாற்றுகிறார்.இலவச சேவைக் காக பயன்படும் இந்த ஆம்புலன்சில் ‘அன்பு ஒன்றே கட்டணம்’ என்று எழுதி வைத்துள்ளார். சாலையோர ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிக்கிறார்.

பிரிதிவிராஜ் கூறியதாவது: என்னால் முடிந்த அளவிற்கு பணியை செய்கிறேன். மாத வருமானத்தில் ஒரு பகுதியை செலவு செய்கிறேன். வாழுகின்ற காலத்தில் கஷ்டப்படுகிறவர் களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற லட்சியம் தான் காரணம். இதன் சேவைக்கு நண்பர்களும் உதவி செய்கின்றனர்,என்றார். இவரை வாழ்த்த, 98421 22046.

Related posts

Leave a Comment