Vasi Vazhviyal Maiyam 18-07-2020

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே… அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் நமது வளர்ப்பினிலே ..
இந்த பாடல் வரிகள் சிறப்பு குழந்தைகளுக்கு மிகச் சரியாக பொருந்துவதாகவே எண்ணுகிறேன்.
சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி அளிக்கும் நம் வாசி வாழ்வியல் மையத்தில் கடந்த இரண்டு மாதமாக பயிற்சி பெற்று வருகிறார் இவர்.
இவருக்கென்று நாம் அளிக்கும் எல்லா பயிற்சிகளிலும் இப்போது நன்றாக தேர்ந்தும் வருகிறார்.

கோவம் வந்தால் கடிப்பது, கத்துவது, பொருள்களை எடுத்து எறிவது, ஆடையில் நின்ற இடத்தில உச்சா மற்றும் டாய்லெட் போவது என பல பிரச்சினைகள் இவருக்கும் இருந்தது.

முதல் சந்திப்பின் போது வந்த இவரின் பெற்றோர் கூறிய தகவல்களில் முக்கியமானவை எப்பொழுதும் ஏதாவது ஒலி எழுப்பி கொண்டே இருத்தல் , கைகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பது, மேலே ஆகாயத்தை பார்த்து கொண்டே இருப்பது நாம் அழைக்கும் போதோ அவரை எதாவது செய்ய சொல்லும் போதோ எந்த செயலும் செய்யாதிருப்பது போன்றவை.
அதைவிட நான் மிகவும் வருந்தியது இரண்டு விஷயங்களுக்காக தான்.
இரவு 12 மணிக்கு மேல் தான் தூங்குவதும் காலை 10 மணிக்கு எழுவதும் வழக்கம்,அளவில்லாமல் இவர் தினமும் தின்றிருந்த அளவற்ற மைசூர்பாகு, ஜிலேபி இன்னும் பிற ஸ்வீட்ஸ், சாக்கலேட்டுஸும் தான். குழந்தைகளின் நிலையையும், அவர்களுக்கு அதன் மூலம் ஏற்படப்போகும் எதிர்வினைகள் பற்றியும் அறியாத சொந்தங்கள் மேலே சொன்ன பொருட்களின் மூலமாக அன்பை வெளிப்படுத்த நினைப்பது மிகவும் ஆபத்தானது.

வந்த முதல் வாரத்தில் ஒரே ரகளை தான் சார்.. இருக்கும் அனைவரும் வந்து நின்று வேடிக்கை பார்க்குமளவுக்கு இருக்கும். அந்த அளவிற்கு அவன் மனதைவிட்டு அகலவில்லை மைசூர்பாகு…

எப்போதும் நான் கையிலெடுக்கும் முதல் ஆயுதம் உணவு…. உணவை சரி செய்தோம். பிறகு உறக்கம் . இரண்டும் சரியான உடன் தான் சக குழந்தைகளை பார்க்கவே ஆரம்பித்தான். நாம் சொல்வதை கேட்க ஆரம்பித்தான்.
தினம் இரவு எட்டு-ஒன்பது மணிக்கு தூங்கி ஆறு-ஏழு மணிக்கு எழுகிறான்.
இன்று உணவை தானாக அள்ளி சாப்பிடுகிறான் , அவனாக பாத்ரூம் சென்று தேவைகளை செய்து கொள்கிறான் .தானே குளிக்கிறான். ஓடுவது அறவே நின்றுவிட்டது. தேவையற்ற ஒலி எழுப்புவதை நிறுத்திவிட்டான். கைகளை ஆட்டுவதை குறைக்க பல பயிற்சிகள் அளிக்கிறோம். விரைவில் அதிலும் மீண்டு வருவான்.
ஒரே வார சைக்கிள் ஓட்ட பயிற்சியில் தேர்ந்து நன்றாக சைக்கிள் ஓட்டுகிறான் (அவன் கவனம் ஒருங்கிணைக்க இது மிகவும் உதவுகிறது )
அடுத்து நீச்சல் பழகுகிறான்.
வெகு சீக்கிரம் என்னை அத்தை என்று அழைத்து,நம்முடன் கதைகள் பல பேசுவான் என்ற நம்பிக்கையில் நான் .

இத்தனை வெற்றிக்கும் உறுதுணையாக நிற்பது இவனின் தந்தை தான். வளர்ச்சி படிநிலையில் பின் தங்கிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுனருக்கு எவ்வித மன அழுத்தமோ, உளைச்சல்களோ அவர்களால் ஏற்பட்டிடா வண்ணம் நம்பிக்கை வைத்து உள்ளன்போடும், ஆத்மார்த்தமான அர்ப்பணிப்போடும் எங்களுக்கு துணைவரும் இத்தந்தைக்கு தலைவணங்குகிறேன்..

என்னையும், குழந்தையையும் பரிபூரணமாக நம்பும் இத்தந்தைக்கேனும் நிச்சயம் அக்குழந்தை பேசுவான்..

நிறைய பேர் நேரிலும், தொலைபேசியிலும் என்னைக் கேட்கும் கேள்வி.. மேடம் குழந்தைக்காக நான் அது பண்றேன், இது பண்றேன்.. இன்னும் என்ன செய்யணும் என்பது தான்..
அதற்கான பதில் இதுதான் முதலில் அளவுக்கடந்த உங்கள் அன்பினால் குழந்தைகளை நிரப்புங்கள். அந்த அன்பை உணர்ந்த தருணத்திலிருந்து உங்களுக்காக குழந்தைகள் எதுவும் செய்வார்கள்..அவர்களுக்கு தேவை தன்னிலைஅறிந்து, தன்னை நேசிக்கும் சக தோழமை மட்டுமே ❤️
பெற்றோரோ, ஆசிரியரோ, பயிற்றுனரோ அல்ல.

❤️பிறந்ததிலிருந்து வார்த்தைகளறியா ஆன்மாக்களின் மௌனத்தை உடைக்க தேவை நமது நேசமும், இடைவிடா முயற்சியும் மட்டுமே🙏🙏🙏

Related posts

Leave a Comment