பிரதமர் அலுவலக இணைச் செயலராக தமிழகத்தின் அமுதா ஐ.ஏ.எஸ். – முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ் -க்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்தவர் அமுதா ஐஏஎஸ். இவர் 1994ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். தமிழக அளவில் முதலிடம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். இவரது பெற்றோர்கள் மத்திய அரசு ஊழியர்கள் ஆவர். இவரது கணவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரும் ஐஏஎஸ் அதிகாரிதான்.

தமிழகத்தில் தர்மபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக அமுதா பணியாற்றி உள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரின் இறுதி சடங்கு பணிகளை திறம்பட கையாண்டவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பணிக்கு சென்ற அமுதா ஐஏஎஸ், முசோரியில் உள்ள ஐஏஎஸ் அகடாமியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிரதமர் அலுவலக இணைச் செயலாராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமுதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி.அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணிசிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment