5 ஆயிரத்தை தாண்டியது தொற்று விருதுநகரை கதிகலங்க வைக்கும் கொரோனா

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 587 பேருக்கு தொற்று உறுதியாக இதன் எண்ணிக்கை 5193 ஐ எட்டி விட்டது. மக்களை கதிகலங்க செய்துள்ள இதை முற்றிலும் குறைக்க மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை அவசியமாகிறது.

துவக்கத்தில் ஊரடங்கு நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலிருந்த தொற்று எண்ணிக்கை தளர்வுக்கு பின்பு எங்கோ சென்று விட்டது. முழுமையான ஊரடங்கு நேரத்தில் அனைத்து துறையும் முடுக்கி விடப்பட்டு தொற்றும் கட்டுக்குள் இருந்தது. இதன் பின்பு தளர்வு அறிவிக்க பஸ் போக்குவரத்து துவங்க தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர துவங்கியது.

போலீசார் முதல் துறை அதிகாரிகள் வரை தளர்வுக்கு பின் கெடுபிடியை குறைத்ததால் இன்று தொற்று அதிகம் பாதித்த குறிப்பிட்ட மாவட்டங்களில் விருதுநகரும் ஒன்றாகி விட்டது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்போருக்கு தொற்று தெரிய வர அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் நாள்கணக்கில் தாமதம்,பரிசோதித்தவர்களை சுதந்திரமாக உலா விட்டது என்பன போன்ற குளறுபடிகளே தொற்று அதிகரிக்க ஒரு காரணமாகி விட்டது.

வியாபாரிகள் முதல் மக்கள் வரை பெரும்பாலானோர் மாஸ்க் முறையாக அணிவதில்லை. சமூக இடை வெளி என்பது எங்கும் இல்லை.கை கழுவும் முறை அறவே போச்சு. சிலர் மாஸ்க் எதற்கு அணிகிறோம் என்பதை கூட கருத்தில் கொள்ளாது தாடையின் கீழ் அணிகின்றனர். சிலர் கழுத்தில் மாட்டி கொண்டு வியாபாரம் பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகமோ அதற்கு தடை இதற்கு தடை என அறிவிப்பு வெளியிடுகிறதே தவிர எதையும் முறையாக பின்பற்றுவதில்லை.

காலை நேரத்தில் பரபரப்பாக இயங்குவதாக தங்களை காட்டிக்கொள்ளும் போலீசாரை பகல்12:00 மணிக்கு எங்கும் காணமுடியவில்லை.இதே போன்றுதான் துறை கண்காணிப்பு அதிகாரிகளும் உள்ளனர்.விருதுநகரில் இந்த கிழமைகளில்தான் டூவீலர்கள் ,கார்கள் வர ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர்.இதுவும் முறையாக இல்லை . இளைஞர்களை கொண்டு விளையாட்டுதனமாக செய்கின்றனர். இவர்களும் பகல் 12:00 மணிக்கு பிறகு மாயமாகி விடுகின்றனர்.

அதன்பின் சர்வசாதாரணமாக பலரும் பஜார் என தடை பகுதிகளில் டூவீலர்களில் உலா வருகின்றனர். ஒட்டிய ஸ்டிக்கரும் அடுத்த சில மணி நேரத்தில வாகன ஓட்டிகளால் கிழித்து எறியப்படுகின்றன. இப்படிதான் கொரோனா தடுப்பு பணியில் உள்ள துறைகளின் செயல்பாடுகள் உள்ளன. இதை பார்க்கும் பொது மக்களும் ஏனோதானோ என உள்ளனர்.

இது போன்ற அசட்டை போக்குதான் இன்று கொரோனா தொற்றை எங்கோ கொண்டு விட்டுள்ளது. இப்படியே போனால் மதுரை அல்ல சென்னையை மிஞ்சும் நிலையே ஏற்படும்.இதன் விவகாரத்தில் அரசுதான் முக்கிய முடிகளை எடுக்க வேண்டும்.

டிமிக்கு கொடுக்கும் அதிகாரி

விருதுநகர் மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலராக சமூகநலத்துறை செயலாளர் மதுமதி நியமிக்கப்பட்டார். முதல் நாள் ஆய்வு செய்து பேட்டி அளித்ததோடு சரி. அதன்பின் ஆளையே காணவில்லை. சென்னையில் இருந்தபடியே விருதுநகர் மாவட்ட நிலவரங்களை ஆய்வு செய்து வருகிறார். இதனால்தான் பிற அதிகாரிகளும் களப்பணிகளுக்கு டிமிக்கி கொடுக்கின்றனர். தொற்றும் அதிகரித்தப்படி உள்ளது.

Related posts

Leave a Comment