என்னோட கேரியர்ல அதுதாங்க திருப்புமுனை… அப்புறம் அடிச்சு ஆடுனேன்.. பிவி சிந்து

ஐதராபாத் : கடந்த 2012ல் ஒலிம்பிக் வீராங்கனை லி ஜுருய்யை தோற்கடித்ததே தன்னுடைய கேரியரில் திருப்புமுனையாக அமைந்ததாக பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார். டேபிள் டென்னிஸ் வீரர் முதித் தானியுடன் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பிவி சிந்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் லி ஜுருய்யை வெற்றி கொண்டது தன்னுடைய நம்பிக்கையை அதிகரித்ததுடன் கடினமாக உழைக்கவும் தூண்டியதாக அவர் கூறியுள்ளார்.

உலக சாம்பியன் சிந்து இந்திய பேட்மிண்டன் உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார் பிவி சிந்து. கடந்த 2013ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்று சாதனை புரிந்த சிந்து, உலகளவில் பேட்மிண்டனில் 7வது இடத்தில் உள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

கேரியரின் திருப்புமுனை இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள பிவி சிந்து, டேபிள் டென்னிஸ் வீரர் முதித் தானியுடன் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் தனது கேரியர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்த சிந்து, கடந்த 2012ல் நடைபெற்ற சீனா மாஸ்டர்ஸ் தொடரில் அப்போதைய ஒலிம்பிக் சாம்பியன் லி ஜுருய்யை அரையிறுதிப் போட்டியில் வெற்றி கொண்டதே தன்னுடைய கேரியரில் திருப்புமுனையாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் இந்த வெற்றி மூலம் தன்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்ததுடன், கடினமாக உழைக்கவும் தூண்டுதலாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2013ல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று வெண்கல பதக்கத்தை வென்றார் சிந்து. தொடர்ந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிந்து இந்த பதக்கத்தை வென்று நாடு திரும்பிய தனக்கு அதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவித்துள்ளார் சிந்து. தன்னுடைய ரசிகர் ஒருவர் தன்னுடைய முழு மாத சம்பளத்தை தனக்கு பரிசாக அளித்ததாக கூறியுள்ளார். தற்போதும் அதை தன்னால் மறக்க முடியவில்லை என்று கூறியுள்ள சிந்து, அதையடுத்து அவருக்கு தான் கடிதத்துடன் பணத்தையும் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு விஷயங்களில் கவனம் இந்த ஊரடங்கு சமயத்தில் பேட்மிண்டன் தவிர்த்து பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார் சிந்து. சமைக்கவும் பேக்கிங் செய்யவும் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் பேட்மிண்டனில் மட்டுமே கவனம் செலுத்திவந்த தான் தற்போது இதுபோன்ற விஷயங்களை கற்று வருவதாகவும் இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment