குடிநீர் வினியோகம் இல்லை தவிக்கும் காமராஜர் காலனி மக்கள்

விருதுநகர்:குடிநீர் வினியோகம் ஆறு மாதமாக இல்லை, எரியாத தெருவிளக்குகள், சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி என விருதுநகர் சத்திரரெட்டியபட்டி காமராஜர் காலனி மக்கள் தவிக்கின்றனர்.

குடிநீர் ஆப்பரேட்டர் மோட்டாரை முறையாக இயக்காததால் 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லை. அடிகுழாய் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த அடிகுழாயும் பழுதடைந்து விட்டது. மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளதால் கூடுதல் தண்ணீரை தேக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. புழக்கத்திற்கு பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளும் காட்சி பொருட்களாகவே உள்ளன.

காலனியின் உட்தெருக்களில் ரோடு வசதி இல்லை. தெற்கு தெருவில் இருந்து காமராஜர் காலனி வரை ரோடு அமைத்தனர். இதையொட்டி தெருக்களிலும் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். இரவில் தெருவிளக்குகள் எரியாததால் பணிமுடித்து திரும்புவோர் சிரமப்படுகின்றனர்.

மயான பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் வாறுகாலை அள்ளாததால் அடிக்கடி கொசுத்தொல்லை ஏற்படுகிறது.

ஆபரேட்டரை மாற்றுங்க

தினமலர் செய்தி எதிரொலியால் சத்திரரெட்டியபட்டி தெற்கு தெருவில் இருந்து காலனி வரை ரோடு அமைக்கப்பட்டது. மீதமுள்ள பகுதிகளுக்கும் ரோடு அமைக்க வேண்டும். தற்போது குடிநீர் பெரும் பிரச்னையாக உள்ளது. ஆபரேட்டரை மாற்றி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

கண்ணன், கூலித்தொழிலாளி

குடிநீரின்றி சிரமம்

மேல்நிலை தொட்டியும் சரியில்லை, குடிநீர் வினியோகமும் முறையாக இல்லை. நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். குடிநீரை விலைக்கு வாங்க முடியாது. பக்கத்து ஏரியாக்களுக்கு சென்று குடிநீர் பெறுகிறோம். முதியவர்கள், கர்ப்பிணிகள் படும்பாடு சொல்லி மாளாது

– சத்தியா, குடும்பத்தலைவி.

சுகாதார வளாகம் தேவை

குளியல் தொட்டி கட்டப்பட்டு வீணாகி வருகிறது. அதை முறையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சுகாதார வளாகத்திற்கு சத்திரரெட்டியபட்டி வரை செல்ல வேண்டியுள்ளது. காலனிக்கு தனியாக சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும்.

– மாரியப்பன், கூலித்தொழிலாளி.

Related posts

Leave a Comment