கேட்ட வரம் அருளும் கோட்டூர் குருசாமி சித்தர்

விருதுநகர்:சிவனை நினைத்து மனமுருகி சித்தன் ஆன ஒவ்வொருவரும் அருளும் வாக்குகள் தீர்க்கமானவை. சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. விருதுநகர் ஆர்.ஆர்.,நகரை அடுத்து கோட்டூரில் குருசாமி சித்தரின் கோயில் அமைந்துள்ளது. இளம் வயதிலே ஆன்மிகத்தில்ஈடுபாடு கொண்டிருந்ததால் துறவறம் பூண்டார் குருசாமி சித்தர்.

சதுரகிரி மலைக்கு சென்று அங்குள்ள சித்தர்களுக்கு தொண்டு செய்தார். 40 ஆண்டுகள் கழித்து மலையை விட்டு இறங்கி சொந்த ஊரான கோட்டூர் வந்தார். குடிசை வீட்டில் தினந்தோறும் தவம் செய்து கொண்டிருந்தார்.இவரிடம் குழந்தையின்மை, தீராத நோய்கள் உள்ளவர்கள் அருள்வாக்கு கேட்டு பயனடைந்து வந்தனர். அவர்களுக்கு மஞ்சள் கிழக்கு, ஆமணக்கு எண்ணெய் கொடுத்து அனுப்புவார். ஓரிரு நாட்களில் உடலில் உள்ள சகல வியாதிகளும் மறைந்து விடும். குழந்தை பேறு கிடைக்கும்.

ஒரு நாள் தனது தம்பி நாகப்பா குருசாமியிடம் ஜீவசமாதி அடைவதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தினார். அதன்படி, ஆடி மகம் அன்று ஜீவசமாதி அடைந்தார். ஒளி வடிவில் அருள்பாலிக்கிறார்.குருசாமி சித்தருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. தான் ஏற்றி வைத்த தீபத்திலே சித்தராக காட்சி தருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தீபம் அணையாமல் நாகப்பா குருசாமி குடும்பத்தினர் ஏழு தலைமுறையாக பராமரித்து வருகின்றனர். இக்கோயிலை சுற்றியுள்ள ஊர்களில் குருசாமி, குருவம்மாள் என தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்து வழிபடுகின்றனர். காரணம் இவர்கள் குருசாமி சித்தர் அருளால் குழந்தை பெற்றவர்களே. கோயிலில் தல விருட்சமாக பூவரச மரம் உள்ளது.

சகல நோய்களை தீர்ப்பார் குருசாமி சித்தர்.சித்தர் அருளால் சிறப்புகோயம்புத்துாரை சேர்ந்த 9 வயது குழந்தைக்கு மூளையில் கட்டி என பெற்றோர் வந்தனர். குருசாமியின் பெயர் சொல்லி அளிக்கப்பட்ட எண்ணெய் குழந்தையின் கட்டி கரைத்தது. அருப்புக்கோட்டை பாலவனத்தத்தை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும் மூளையில் கட்டி இருந்தது. அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் கோயிலில் வந்து மொட்டையடித்து சென்றார். மறு நாள் ஸ்கேன் எடுத்து பார்க்கையில் கட்டி இருந்த இடம் தெரியாமல் போனது. இப்படி தன்னை நாடி வருவோருக்கு நலன்கள் யாவும் குருசாமி சித்தர் வழங்குவதால் அனைத்து தரப்பினரும் வணங்குகின்றனர்.

– இ.சண்முகநாதன், ஓய்வு ஆசிரியர்.

Related posts

Leave a Comment